சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கு ‘ரிக்கார்டிங்’ தியேட்டராக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த அரங்கை வேறு தேவைக்கு பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்தது. அதனால் இடத்தை காலி செய்ய இளையராஜாவை வலியுறுத்தியது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில், ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “பிரசாத் ஸ்டூடியோவில் இத்தனை ஆண்டுகள் இசையமைத்த அரங்கில் ஒரு நாள் சென்று தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும். கைப்பட எழுதிய இசை கோப்புகள், இசை கருவிகள், தனக்கு கிடைத்த விருதுகள் ஆகியவை அங்கு உள்ளன. அவற்றை எடுத்துக்கொள்ள அனுமதிக்க ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிடவேண்டும்,” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, பிரசாத் ஸ்டூடியோ சார்பில் மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, “இளையராஜா பயன்படுத்திய இடத்தில் தற்போது மென்பொருள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு இளையராஜா வைத்திருந்த அனைத்து பொருட்களும் வேறு ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதை அவர் எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்,” என்று தெரிவித்தார்.

இருப்பினும் பொருட்களை எடுத்துக்கொள்ள இளையராஜாவை அனுமதித்தால் ரசிகர்கள் அதிக அளவில் கூடி விடுவார்கள் என்பதால் அவருக்கு பதிலாக அவரது பிரதிநிதிகள் வந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள், இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் செல்லலாம் என்றும் யோசனை தெரிவித்ததுடன், இதுகுறித்து இரு தரப்பும் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இசையமைப்பாளர் இளையராஜாவை நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோரக் கூடாது, ஒரு உதவியாளர், ஒரு இசைக் கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகள் பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நிபந்தனைகளை ஏற்று இன்று மாலை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *