ரயில் பயணங்கள்தான் பால்ய காலத்தின் அதிசயம். மரங்கள் ஏன் ஓடுகின்றன என்று கேள்வி எழுந்த பருவம். எப்போதும் நமக்கு ரயில்தான் புதிய மனிதர்களை, புதிய பிரதேசங்களை, புதிய வாழ்க்கையை காட்டிக்கொண்டே இருக்கிறது. ரயில் பயணம், வற்றாத நதியாக வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும்.

டிஸ்கவரி சினிமாஸ் வேடியப்பன் தயாரிப்பாளராகவும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராகவும் அறிமுகமாகும் திரைப்படம் ரயில். பிழைப்புக்காக புலம் பெயரும் வடமாநிலத் தொழிலாளர்களால் தமிழ் மண்ணில், தமிழ் மனங்களில் ஏற்பட்ட மாற்றத்தை அழகிய காட்சிகளுடன் பேசுகிறது.

நம் மூதாதையர் மலேசியா, பர்மா, வியட்நாம், சிசெல்ஸ் என புலம்பெயர்ந்து சென்று சுரங்கங்களில், கரும்புத் தோட்டங்களில் வேலை செய்திருப்பது வரலாறு. இன்று தமிழ்நாடு பிரம்மாண்டமான புலம்பெயர்தலை எதிர்கொள்கிறது. அது சமூக, அரசியல், கலாச்சார வெளிகளில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

ஒரு சிறு பொறியை எடுத்துக்கொண்டு தேனி ஈஸ்வரின் கேமரா கண்களின் வழியாக பெரும் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் பாஸ்கர் சக்தி. கதையில் ஹீரோவைப் பார்ப்பதற்கு தமிழர்கள் எல்லாம் குடிகாரர்களாக மாறிவிட்டார்கள் என்பதுபோல தெரிந்தாலும், அதற்கான நியாயத்தை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார்.

வட மாநிலத் தொழிலாளர்களின் புலம் பெயர்தல் பற்றி அதிகம் பேசாமல், இங்கு குடிப்பதால் வேலையிழப்பு ஏற்படுகிறது என்று ஒரு தரப்புப் பார்வையை மட்டும் முன்வைத்திருப்பது முரணாகத் தெரிகிறது. இங்கே குறைகளைப் பேசாமல் எளிய படங்களை வரவேற்பதும் ஆதரிப்பதும் காலத்தின் தேவை.

ஹீரோவுக்கு நண்பனாக வரும் ரமேஷ் வைத்யாவின் மிக எதார்த்தமான தேனி பேச்சு வழக்கும், உடல்மொழியும் தேர்ந்த நடிகராக காட்டுகின்றன. ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் தமிழ் சினிமாவுக்கு வருகிறார். நமக்குக் கோபம் வரும் அளவுக்கு நடித்திருக்கும் குங்குமராஜ் பாராட்டுக்குரியவர்.

திரைப்படங்களில் பழகிப்போன இசையிலிருந்து மாற்றான புதிய இசையையும் இனிய பாடல்களையும் வழங்கியுள்ள இசையமைப்பாளர் எஸ் ஜெ ஜனனியை பல வாய்ப்புகள் தேடி வரும். மனைவியாக வரும் வைரமாலா, அவரது தந்தையாக நடித்துள்ள செந்தில் கோச்சடை இருவரும் கவனிக்க வைக்கிறார்கள்.

திரை எழுத்தில் பெருமைகளைச் சேர்த்த பாஸ்கர் சக்தி, முதல் படத்தையும் இயக்கி வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார்!

– சுந்தர புத்தன்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *