அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு… இந்துக்கள் கோலாகலம்… பாகிஸ்தான் கண்டனம்!

2

 

அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி மதியம் 12.30 மணி அளவில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ‘ராம் லல்லா’ எனப்படும் பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். சிறப்பு வழிபாட்டுக்குப் பின்னர் அச்சிலையின் கண்களை மூடியிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மதியமே, 1.28 மணியளவில், 51 அங்குல ராமர் சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுவிட்டது.

முன்னதாக, அயோத்தி ராமர் கோவிலுக்கு பூஜை பொருட்கள், பட்டு வஸ்திரங்களுடன் வந்த பிரதமர் மோதி, அங்கு சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார். இந்த வழிபாட்டில் மோடிக்கு அருகே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அந்த மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

மேலும், இவர்கள் தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 15 பேரும் கலந்துகொண்டனர்.

ராமர் சிலை பிரதிஷ்டைக்குப் பிறகு கோவில் வளாகத்தில் குழுமியிருந்தவர்களை நோக்கிப் பேசிய பிரதமர் மோடி, “பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு, துறவு, தவம், தியாகம் முடிந்து ராமர் இங்கு வந்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மக்கள் இந்நாளை நினைவில் வைத்துக்கொள்வார்கள்” என்றார்.

அயோத்தி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

பாகிஸ்தான் கண்டனம்

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பாகிஸ்தான் கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

“இந்தியாவின் அயோத்தி நகரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருப்பதை பாகிஸ்தான் கண்டிக்கிறது.

பல நூற்றாண்டுகள் பழமையான மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி ஒரு கும்பலால் இடிக்கப்பட்டது. வருந்தத்தக்க வகையில், இதற்குக் காரணமான குற்றவாளிகளை இந்தியாவின் உச்ச நீதி பரிபாலன அமைப்பு விடுதலை செய்ததுடன், மசூதி இடிக்கப்பட்ட இடத்திலேயே கோவில் கட்டவும் அனுமதி அளித்தது.

கடந்த 31 ஆண்டு நிகழ்வுகளின் நீட்சியாக இன்று நடந்தேறியுள்ள கும்பாபிஷேகம் இந்தியாவில் பெரும்பான்மைவாதம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. இந்திய முஸ்லிம்களை சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஓரங்கட்டுவதற்கான முயற்சிகளில் முக்கிய அம்சமாக இவை விளங்குகின்றன.

மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட கோவில் இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் ஒரு கறையாகவே இருக்கும். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி போன்றவையும் இதேபோன்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.

இந்தியாவில் அதிகரித்து வரும் இந்துத்துவா அலை மத நல்லிணக்கத்திற்கும் பிராந்திய அமைதிக்கும் மிகவும் அச்சுறுத்தலானது. இந்தியாவின் 2 பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகியவற்றின் முதலமைச்சர்கள், பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவிலை கட்டியது பாகிஸ்தானில் பகுதிகளை திரும்பப் பெறுவதற்கான முதல் படி என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில் இஸ்லாமோபோபியா, வெறுப்புப் பேச்சு, வெறுப்புணர்வுக் குற்றங்கள் ஆகியவை அதிகரித்து வருதை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க ஐ.நா. மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் தலையிட வேண்டும். அத்துடன், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் மத, கலாசார உரிமைகளையும் பாதுகாத்திட வேண்டும்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினர் மற்றும் அவர்களது புனிதத் தலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசை பாகிஸ்தான் கேட்டுக்கொள்கிறது.”