வதந்தி தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. வரும் டிசம்பர் 2 ஆம் தேதி இந்தத் தொடர் உலகமெங்கும் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் தொடர்ந்து ஒளிபரப்பாக இருக்கிறது. முன்னதாக அண்மையில் நடந்து முடிந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்புத் திரையிடலாக ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ காட்சிப்படுத்தப்பட்டது. ஆசியாவின் பிரம்மாண்ட திரை விழாவான கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ‘வதந்தி’ வெப் சீரிஸுக்கு அரங்கம் அதிரும் வரவேற்பு கிட்டியது. ஆண்ட்ரூ லூயிஸ் எழுத்து, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வதந்தி’ முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் ப்ரைம் வீடியோவும் வால்வாட்சர் ஃப்லிம்ஸும் இணைந்து இந்தத் தொடரின் சிறப்புத் திரையிடலை நண்பர்களுக்காக ஒருங்கிணைத்துள்ளன. இந்தத் தொடர் ப்ரைம் வீடியோவில் வெளியாக இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இந்த சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது.

தொடரின் தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் இணைந்து அனைவரையும் வரவேற்றனர்.

‘சுழல்’ வெப் சீரிஸ் இயக்குநர்கள் பிரம்மா ஜி, அனுசரண் முருகையன் மற்றும் நடிகர் கதிர் சிறப்புத் திரையிடலுக்கு வந்திருந்தனர். நடிகை ஆல்யா மானஸாவும், தமிழ் காமெடி நடிகர் புகழும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்தனர். இவர்களுடன் ‘மான்ஸ்டர்’ இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், ’96’ இயக்குநர் பிரேம் குமார், ‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, நடிகைகள் வசுந்தரா, கலை ராணி ஆகியோரும் சிறப்புத் திரையிடலில் கலந்து கொண்டனர்.

‘வதந்தி’ என்ற சொல்லின் அர்த்தம் போலவே இந்த சீரிஸ் ஒரு இளம் பெண் அதுவும் அழகான பெண் வெலோனியின் வதந்திகள் நிறைந்த உலகுக்குள் உங்களை அழைத்துச் செல்லும். வெலோனியாக அறிமுக நடிகை சஞ்சனா நடித்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர், காயத்ரி இந்தத் தொடரைத் தயாரித்துள்ளனர். இந்தத் தொடர் மூலம் நடிகை லைலா ஓடிடி தளத்திற்கு வந்துள்ளார். அதேபோல் சஞ்சனா என்பவர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் நாசர், விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன், ஸ்ம்ருதி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். 8 அத்தியாயங்கள் கொண்ட இந்த பரபரப்பு குற்றத் தொடர் இந்தியா உள்பட 240 நாடுகளில் டிசம்பவர் 2ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள, கன்னடம் என பல மொழிகளிலும் தொடராக் காணலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *