கேஜிஎஃப் 2, சார்லி 777 வரிசையில் விக்ராந்த் ரோனா… இந்த 2022-ல் சொல்லி அடித்த கன்னடப் படங்கள். 4 நாட்களில் ரூ 100 கோடி வசூலைத் தாண்டி, அனைத்திந்திய வெற்றிப் பட வரிசையில் 3 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது சுதீப்பின் விக்ராந்த் ரோனா.

படம் வெளியான முதல் நாள் மட்டும் ரூ 35 கோடியை வசூலித்த விக்ராந்த் ரோணா, நான்கு நாட்கள் முடிவில் ரூ 116 கோடியைத் தாண்டியுள்ளது. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியில் இந்தப் படம் நான்கு நாட்களில் ரூ 6 கோடி வரை வசூலித்துள்ளது மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அங்கே வெளியாகும் இந்திப் படங்களுக்குக் கூட இந்த வரவேற்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூலில் குறை வைக்கவில்லை சுதீப்பின் இந்தப் படம்.

இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி, சுதீப்பின் முயற்சியை வெகுவாகப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது இந்தப் படத்துக்கு இன்னொரு கூடுதல் விளம்பரமாக மாறியுள்ளது. திங்கள்கிழமையன்றும் கூட ஆந்திரா, தெலங்கானாவில் கணிசமான பார்வையாளர்கள் இப்படத்தைக் காண வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விக்ரம் ரோணா படம் ரூ 90 கோடியில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *