ஒகேனக்கல்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரானது வினாடிக்கு 1லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளே தெரியாத அளவுக்கு பெரும் வெள்ளம் பாய்கிறது. இதனால் காவிரி கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 7 நாட்களாக ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீடிக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *