வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல நாளிதழான ’தி நியூயார்க் டைம்ஸ்’ முகப்பு பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியைப் புகழ்ந்து செய்தி வெளியிட்டதாக சமூகவலைதளத்தில் படங்கள், செய்திகள் பரவின.

அதில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தனது முகப்பு பக்கத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டு அதில், ‘உலகின் கடைசி மற்றும் நம்பிக்கை என்று குறிப்பிட்டு, உலகின் அதிக நபர்களால் விரும்பப்படும் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த தலைவர் நம்மை வாழ்த்த இங்கு வந்துள்ளார்’ என தெரிவிப்பது போன்ற புகைபடங்கள் சமூகவலைதளத்தில் வெளியானது.

ஐ.நா. சபையில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த நிலையில் நியூயார்க் டைம்ஸில் இதுபோன்ற செய்தி வந்துள்ளதாக கருதி பலரும் இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துவந்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியை உலகின் கடைசி நம்பிக்கை என கூறி நியூயார்க் டைம்சில் வெளியான செய்தி போலியானது என தெரிந்தது. பிரதமர் மோடியை உலகின் மிகவும் விரும்பமான தலைவர் மற்றும் சக்திவாய்ந்த தலைவர் என நியூயார்க் டைம்ஸ் தனது நாளிதழில் எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழே இப்போது அந்த செய்திக்கு மறுப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “அந்த படம் முழுக்க முழுக்க வேறு யாரோ போலியாக டிசைன் செய்து வெளியிடப்பட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸில் இப்படியான செய்திகள் எதுவும் இடம்பெறவில்லை,” என்று தெரிவித்துள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *