சென்னை: அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று பலரும் விவாதித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், நேற்று தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார். 2021-ல் புதிய கட்சி ஆரம்பிக்கப்படும் என்றும், அதுகுறித்த முறையான அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அதில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த பதிவில், “வரப் போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.

அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!” என்றும் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை பிற்பகலில் தனது இல்லத்தி்ல் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, தனது இறுதியான அரசியல் முடிவை அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், “2017 டிசம்பர் 31-ல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறி இருந்தேன். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தோம். கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம் தான்.

ரசிகர்களின் பிரார்த்தனையால்தான் என் உயிர் மீண்டது. என் உயிரை மீட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.

ஒவ்வொரு மனிதனுகிகும் தலையெழுத்து உள்ளது. அதே போலத்தான் ஒரு நாட்டுக்கு, ஒரு மாநிலத்துக்கும் தலையெழுத்து உள்ளது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்து விட்டது. எல்லாத்தையும் மாத்துவோம்.

தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தால் அதுவும் மக்களின் தோல்விதான், தமிழகத்துக்கு அரசியல் மாற்றம் தேவை. கட்டாயம் நிகழும்.

கலாநிதி மாறனின் படம் அண்ணாத்த முடிக்க வேண்டியுள்ளது. இன்னும் 40 சதவீதப் பணிகள் உள்ளன. படப்பிடிப்பு முடிந்தவுடன் கட்சிப் பணிகளில் முழு மூச்சாக இறங்க உள்ளேன்,” என்றார்.

தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் அறிவித்தார் ரஜினி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *