அமீர் பற்றி அநாகரீக பேச்சு: வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா

3

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா ‘பருத்தி வீரன்’ படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது.

ஞானவேல் ராஜாவின் இந்தப் பேட்டிக்கு எதிராக திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மூத்த இயக்குநர் பாரதிராஜா உள்பட தமிழ் திரைப்பட படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஞானவேல் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருத்தி வீரன்’ பிரச்சினை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன்.

அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தின. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த அறிக்கை போலியானது என்றும், இதனை ஏற்க முடியாது என்றும் இயக்குநர் சசிகுமார் உடனடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.