நடிகர்கள்: ரிச்சர்ட், யாஷிகா ஆனந்த், புன்னகைப்பூ கீதா
ஒளிப்பதிவு: அபிமன்யு
இசை: ரோகித் குல்கர்னி
தயாரிப்பு: புன்னகைப்பூ கீதா
இயக்கம்: வினய் பரத்வாஜ்
உலகப் புகழ் அழகு சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் லண்டனில் வசிப்பவர். அங்கே அவருக்கு சொந்தமாக மருத்துவமனை. ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள். அவர் மனைவி கீதா. தன்னிடம் அழகு சிகிச்சைக்காக வரும் மாடலான யாஷிகா ஆனந்தைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் ரிச்சர்ட். யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் நேரம் பார்த்து, மனைவி கீதா நண்பர்களுடன் வீட்டுக்கு வந்துவிட பதட்டமாகும் ரிச்சர்ட், யாஷிகாவை வெளியேற்ற முயற்சிக்கிறார். ஆனால் திடீரென யாஷிகா அங்கேயே இறந்துவிடுகிறார்.
யாருக்கும் தெரியாமல் யாஷிகாவின் உடலை அப்புறப்படுத்திவிடும் ரிச்சர்ட், குற்ற உணர்வில் தவிக்கிறார். யாஷிகாவின் உறவுக்காரப் பெண் ஒருத்தி, ரிச்சர்ட்டை அணுகி பணம் கேட்டுப மிரட்டுகிறார். இதனால் ஒரு கட்டத்தில் மனைவியிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறார் ரிச்சர்ட். மனைவி கீதா அதை எப்படி எடுத்துக் கொள்கிறார்… அந்த மிரட்டலுக்கு ரிச்சர்ட் பணிந்தாரா… என்பது மீதிக் கதை.
படம் முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்ட மாதிரியான ஒரு தோற்றத்தைத் தந்திருக்கிறது ஒளிப்பதிவு. குறிப்பாக வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வுகளில் தெரியும் அந்த வெளிநாட்டு ஆடம்பரமும் அமைதியும் நம்பகத் தன்மைக்கு உதவுகிறது.
ரிச்சர்டுக்கு இயல்பான நடிப்பு வரவில்லை. சில இடங்களில் செயற்கைத்தனம் தெரிகிறது. எப்போதும் மன இறுக்கத்துடனே தெரிகிறார். யாஷிகாவுடனான காட்சிகளில் மிக இயல்பாக நெருக்கம் காட்டுகிறார். குறிப்பாக முதல்பாதியில் திகட்டத் திகட்ட நெருக்கம்!
யாஷிகா ஆனந்த் ஆரம்ப காட்சிகளில் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டுகிறார். நடிப்பதற்கு பெரிதாக மெனக்கெடவில்லை. இறுதிக் காட்சிகளில் அவரது மேக்கப் பயமுறுத்துகிறது.

ரிச்சர்ட் மனைவியாக வரும் கீதா, எப்போது பார்த்தாலும் கணவனை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பது போல காட்சிகள். முடிந்தவரை நடித்திருக்கிறார். ஆனால் பல காட்சிகளில் ஏகத்துக்கு செயற்கைத்தனம். அவரது நண்பர்களாக வரும் பாத்திரங்கள் எரிச்சலூட்டுகின்றன. பணம் கேட்டு மிரட்டும் அந்தப் பெண்ணின் நடிப்பு பரவாயில்லை.
கதையின் போக்கு இடைவேளைக்குப் பிறகு இப்படித்தான் இருக்கும் எனப் புரிந்துவிடுவதால், அந்த க்ளைமாக்ஸ் திருப்பத்தில் பெரும் திடுக்கிடல் இல்லை.
இசை பெரிதாக ஈர்க்கவில்லை, ஒரு மதுக்கூட பாடலுக்கு பாரதியாரின் வரிகளைப் பயன்படுத்தி கடுப்பேற்றுகிறார்கள்.
இன்னும் செரிவான திரைக்கதை, தேர்ந்த நடிகர்களுடன் வந்திருந்தால், சில நொடிகள் என்றாலும் ஈர்த்திருக்கும்.