அஸ்வின்ஸ் பட விமர்சனம்

2

நடிகர்கள்: வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ் மேனன், முரளிதரன், உதயாதீப்

ஒளிப்பதிவு: எட்வின் சகாய்

இசை: விஜய் சித்தார்த்

இயக்கம்: தருண் தேஜா

ஹாலிவுட் பாணியில் ஒரு திகில் படத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறது புதிய இளைஞர் குழு. அதில் வெற்றி பெற்றிருக்கிறார்களா? வாங்க பார்க்கலாம்!

லண்டனில் ஒரு வினோதமான தீவில் ஒரு ஆடம்பர மாளிகை. அதில் வாழ்ந்த பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் விமலா ராமன், அங்கிருந்த 15 பணியாளர்களைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆனால் அவரது சடலம் மாயமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த சடலம் எப்படி மாயமானது, உண்மையில் எங்கே இருக்கிறது என்பது புதிராகவே உள்ளது. அத்துடன் அந்த மாளிகையில் பல அமானுஷ்ய விஷயங்கள் தொடர்ந்து நடப்பதாகவும் பேச்சு உலாவுகிறது.

இந்த விஷயங்கள் அனைத்தும் யூட்பர்களான வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோருக்குச் சொல்லப்படுகிறது. அந்த மாளிகைக்குள் நுழைந்து நடப்பது அனைத்தையும் வீடியோவாக எடுக்கும் பணியை ஏற்கும் இந்தக் குழு, லண்டன் செல்கிறார்கள். அந்த மாளிகைக்குள் சென்றதிலிருந்து, ஒவ்வொரு நொடியும் நடக்கும் பரபர திகில் சம்பவங்கள்தான் அஸ்வின்ஸ் படம்.

நாயகன் வசந்த் ரவிக்கு வசனங்கள் அதிகம் இல்லை. தனது நடிப்பு மூலம் பார்வையாளர்களை பரபரக்க வைக்கிறார்.

சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கின்றனர். அந்த மாளிகைக்குள் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் அவர்களது அலறல் குரல், படம் முடிந்த பிறகும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருப்பதுதான் இந்தப் படத்தின் தாக்கம்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆர்த்தியாக விமலா ராமன் தேர்ந்த நடிப்பைக் கொடுத்துள்ளார்

விஜய் சித்தார்த்தின் இசை, எட்வின் சகாயின் ஒளிப்பதிவு இரண்டுமே படத்துக்கு பக்க பலமாக நிற்கின்றன.

அஸ்வினி தேவர்கள், தீய உலகம், தூய உலகம் என்றெல்லாம் சுற்றி வளைக்காமல், சொல்ல வந்ததை இன்னும் எளிமையாகச் சொல்லியிருக்கலாம்.

இருந்தாலும், திகில் படங்களுக்கென உள்ள வழக்கமான வடிவத்திலிருந்து புதிதாக ஒரு அனுபவம் தர முயன்றிருக்கிறார்கரள். அந்த முயற்சியைப் பாராட்டலாம்.

எஸ்எஸ்