‘செஞ்சி’ பட விமர்சனம்

2

நடிகர்கள்: கணேஷ் சந்திரசேகர், கெசன்யா (ரஷ்யா)
இசை: வீ முத்து கணேஷ்
தயாரிப்பு – இயக்கம்: கணேஷ் சந்திரசேகர்

ஒரு புதையல் வேட்டை சார்ந்த கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது செஞ்சி திரைப்படம்.

பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள். வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் உள்ளே நுழைகிறாள். அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அங்கே ஏதோ ஒரு அமானுஷ்யம் அவளுக்குத் தட்டுப்படுகிறது. எவ்வளவு தைரியமாக இருந்தாலும் மனதிற்குள் ஒரு பயம் வருகிறது. அங்கே ஒரு ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதில் ஏதோ ரகசியம் இருப்பதாகப் படவே தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனை நாடுகிறாள். அவர் வந்து அதை ஆராய்ந்து அதற்குள் ஏதோ ஒரு ரகசியம் புதைந்திருப்பதாகக் கூறுகிறார். அது பற்றி மேலும் அறிய விரும்பும்போது அதில் ஒரு புதையலுக்கான ரகசிய குறியீடுகள் உள்ளதாக அவருக்குத் தெரிகிறது. சோபியாவுடன் இணைந்து தேட ஆரம்பிக்கிறார். அந்த புதையல் வேட்டைக்கான பாதையில் ஐந்து தடயங்கள் உள்ளதாகக் குறிப்புகள் கூறுகின்றன. ஐந்தையும் ஒவ்வொன்றாக அடைந்து இறுதியில் அந்தப் புதையலைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் செஞ்சி படத்தின் கதை.

புதையல் வேட்டை ஒரு பக்கம் நகரும் போது,இன்னொரு பக்கம் ஐந்து சிறுவர்கள் ஊருக்குள் அடிக்கும் லூட்டியைக் காட்டிச் சற்று நேரம் கதை நகர்கிறது. அவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தால், இரண்டாவது பாதியில் தொடர்பு படுத்துகிறார் இயக்குநர்.

படத்தை தயாரித்து இயக்கியுள்ள கணேஷ் சந்திரசேகர் இதற்கு முன் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அது படம் தொடங்கி, முடியும் வரை நன்றாகவே தெரிகிறது.

படத்தில் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இயக்குநர் கணேஷ் சந்திரசேகர் நடித்துள்ளார். வசன உச்சரிப்பில் அவர் இன்னமும் தேறிவர வேண்டும். ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனம் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலேயப் பெண்மணியாக ரஷ்ய நடிகை கெசன்யா நடித்துள்ளார். இயக்குநரை விட அந்த நடிகை மிகச்சிறப்பாக நடித்து உள்ளார். தோற்றத்திலும் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் அனுபவம் தெரிகிறது.

படத்தில் சுட்டித்தனம் செய்யும் அந்த ஐந்து சிறுவர்களும் மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன்
மாஸ்டர் தர்சன் குமார்மாஸ்டர் விதேஷ் ஆனந்த், மாஸ்டர் சஞ்சய், பேபி தீக்ஷன்யா மனதில் பதிகிறார்கள்.

காட்சிகள் செஞ்சி தொடங்கி பல்வேறு நிலப்பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளன. அந்தக் காற்று செதுக்கிய சிற்பங்களாக இருக்கும் அந்தப் பாறைகள் நடுவே சென்று சந்து பொந்து இடுக்கு வழியில் எல்லாம் புகுந்து புறப்பட்டுள்ளது ஹரிஸ் ஜிண்டேவின் கேமரா.

பாடல்களை விட முத்துகணேஷின் பின்னணி இசை பரவாயில்லை. இசையமைப்பாளர் எல். வி. முத்து கணேஷ் பளிச்சிடுகிறார்.

தமிழ் சினிமாவின் வழக்கம்போல காதல் காட்சிகள், டூயட், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் என்ற எந்த மசாலா அம்சமும் இல்லாமல் இப்படம் உருவாகி உள்ளது.

நமது வரலாறு புதைந்து கிடக்கும் இடங்களைத் தேடித்தேடி படமாக்கி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலக் காட்சிகளைப் பார்க்கும் போது நமது தொன்மங்கள் மீது நமக்கே ஆர்வம் வந்து விடுகிறது.

சிறுவர்கள் அடிக்கும் லூட்டிகள் சம்பந்தப்பட்ட நீளமான காட்சிகளுக்கு சற்றுக் கத்திரி போட்டிருக்கலாம். அதே சமயம் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் முதிர்ச்சி தெரியவில்லை. மேலும் சில காட்சிகளை நேர்த்தியாக்கி இருந்தால் படம் மேலும் மேம்பட்டிருக்கும்.

அனிதா எஸ்