திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் தி ஷோ பீப்பிள் இணைந்து வழங்கும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் அறிவியல் திரில்லர் திரைப்படம் கேப்டன். டெடி படத்தின் வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படதின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சத்யம் திரையரங்கில் நடந்தது.

இவ்விழாவினில் திரையுலக பிரபலங்கள் பலருடன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இசையமைப்பாளர் டி இமான் பேசுகையில், “இந்த படத்தில் ஆர்யா கடின உழைப்பை கொடுத்துள்ளார், அது திரையில் தெரிகிறது. அதிகமாக கிராபிக்ஸ் இருக்க கூடிய கதைக்களத்தை தான் இயக்குநர் சக்தி கொண்டு வருவார். அது மிகவும் கடினமான ஒரு காரியம். ஏனென்றால் கற்பனையான உருவத்தை இல்லாமலே இயக்க வேண்டும். அதற்கு இசையமைக்க வேண்டும். அது மிகவும் சவாலான காரியம். இயக்குநர் உடைய தெளிவான சிந்தனை தான் திரைப்படத்தை நேர்த்தியாக்கி இருக்கிறது. இந்த படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியுள்ளார். அவருக்கு நன்றி,” என்றார்.

நடிகர் ஆர்யா பேசுகையில், “நாங்கள் இந்தக் கதையை தயாரிப்பாளர் ஸ்வரூப்பிடம் கூறும் போது, அவர் எங்களை முழுதாய் நம்பினார். படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்தார். இயக்குநர் சக்தி உடைய சிறப்பு என்னவென்றால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒரு புது ஜானரை முயற்சிக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளை எல்லாம் அவர் சிறப்பாக திரையில் கொண்டு வருவார். இந்த படத்தின் சண்டைகாட்சிகளை சிரத்தை எடுத்து செய்துள்ளோம். ஒரு பிரமாமண்ட மிருகத்துடன் சண்டை போடும் வகையில் இருக்கவேண்டுமென, அதற்கு ஏற்றார் போல் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இமான் சார் இந்த படத்தின் முதுகெலும்பு என்றுதான் சொல்ல வேண்டும். இது ஒரு ஆக்சன் படம் என்றாலும், அதில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை,” என்றார்.

இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கூறுகையில், “கேப்டன் படம், நான் செய்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம். படம் உருவாக ஆர்யாவும், தயாரிப்பாளர் ஸ்வரூப்பும் தான் காரணம். இதுபோன்ற படங்களை நம் ஊரில் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இந்த படம் உருவாவதற்கு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி கூற வேண்டும். இந்த படம் என் மனதிற்கு நெருக்கமான படம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்,” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு:

“திங்க் ஸ்டுடியோ நிறுவன முதல் படைப்பே கேப்டன் என்ற பெயரில் வந்திருப்பது மகிழ்ச்சி. படத்தை நேர்த்தியாக உருவாக்குவதில் சிறந்த இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன், அவருடைய எண்ணத்தை இமான் இசையாக்கி இருக்கிறார். நடிகர் ஆர்யா சிறப்பான நடிகர். அவர் திரைப்படத்தை வெளியிடுவதிலும் ஒரு பகுதியாக இருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.”

தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி பேசியதாவது:

“கேப்டன் படத்தின் இசையும் டிரெய்லரும் பான் இந்தியா திரைப்படத்திற்கான அம்சங்கள் அனைத்து நிறைந்து இருப்பதை நிரூபிக்கிறது. இந்த படத்தின் டைட்டிலுக்கு பொருத்தமானவர் ஆர்யா. ஒரு வெற்றி கூட்டணி மீண்டும் படம் பண்ணியுள்ளனர். படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.”

நடிகர் சந்தானம் பேசியதாவது:

“என்னுடைய நட்பு ஆர்யாவுடன் மிகவும் நெருக்கமான ஒன்று. ஆர்யா உடைய எந்த திரைப்படமாக இருந்தாலும், அதற்கு என் அன்பு இருக்கும். இது ஒரு ஏலியன் படம், இந்த புதுவிதமான கற்பனைக்கே எனது வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். நான் இப்போது ஹீரோவாக மட்டும் நடித்துக் கொண்டு தனி வழியில் போய்க் கொண்டிருக்கிறேன். எத்தனையோ பேர் கேட்டும் காமெடி வேடம் பண்ணவில்லை. ஆனால் என் நண்பன் ஆர்யா கூப்பிட்டால் அவர் படத்தில் மட்டும் காமெடி என்றல்ல… எந்த வேடமானாலும் நடிப்பேன். காரணம் ஆர்யாவின் நட்பு உண்மையானது,” என்றார்.

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் யுவா, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, படத்தொகுப்பாளர் பிரதீப், பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் பேசினர்.

கேப்டன் படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் டி இமான் (இசை), எஸ் .யுவா (ஒளிப்பதிவு), கார்க்கி (பாடல் வரிகள்), பிரதீப் இ ராகவ் (எடிட்டிங்), ஆர்.சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), எஸ்எஸ் மூர்த்தி (கலை இயக்குநர்), மற்றும் வி.அருண் ராஜ் (சிஜி) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

வரும் செப்டம்பர் 8, 2022 அன்று உலகம் முழுவதும் ‘கேப்டன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கேப்டன் முன்னோட்டம்:

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *