விக்ராந்த் ரோணா பட விமர்சனம்

2

கேஜிஎஃப் 2, சார்லி 777 என தன் சொந்த மொழியிலிருந்து சின்னப் பையன்கள் அனைத்திந்தியப் படம் கொடுத்த அசத்த, நான் மட்டும் சளைத்தவனா என விக்ராந்த் ரோணாவை விட்டிருக்கிறார் சுதீப்.

படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என படம் பார்ப்பவர்களே யூகித்துக் கொள்ள வேண்டும். கமரூட்டு என்ற மலைப் பகுதிக்கு வரும் காவல் அதிகாரி மர்மமான முறையில் கொல்லப்பட, அதை விசாரிக்க சுருட்டும் துப்பாக்கியுமாக திறந்த ஜீப்பில் வந்து சேர்கிறார் விக்ராந்த் ரோணா எனும் சுதீப். விசாரணையைத் தொடங்கினால், அடுத்தடுத்து 16 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இந்தக் கொலைகளுக்குக் காரணம் காட்டுப் பேயா.. மனிதர்களா… என்ன காரணம் என்பதையெல்லாம் ரோணா எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பது மீதி. இந்தக் கதைக்குள்ளேயே கோயில் நகையைத் திருடிவிட்டு ஓடிப்போன ஜமீன்தார் மகன், அவனுக்கு ஒரு காதலி, அவர்களுக்கு ஒரு வில்லன் என தனிப் பாதை வேறு.

‘கதையே இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை. காட்சிகள் மூலம் பார்வையாளர்களை மிரட்டிவிட வேண்டும். அப்போதுதான் ‘பான் இந்தியா’ படம் வசூலைக் கொட்டும் என இயக்குநர் அனுப் பண்டாரிக்கு பாடம் எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. அவர் திரைக்கதை பற்றியோ, பளிச்சென்ற அல்லது பார்ப்பவர்களை வருந்த வைக்காத ஒளிப்பதிவு குறித்தோ கவலைப்படவே இல்லை. இருட்டு இருட்டு இருட்டு…. படம் முழுக்க இருள்மயம்தான். முதல் காட்சியில் அறிமுகமாகும் நாயகன் சுதீப், அந்த கடைசி சண்டைக் காட்சி வரை டார்ச் லைட்டோடுதான் அங்கும் இங்கும் ஓடுகிறார் என்றால் ஒளிப்பதிவாளரின் (வில்லியம் டேவிட்) லெவல் என்ன என்பது புரிந்திருக்கும். சாதாரணமாகவே இருட்டுக் காட்சிகள் கடுப்பேற்றும்… இதில் 3டி கண்ணாடி வேறு. ஒவ்வொரு காட்சியையும் உற்று உற்றுப் பார்த்தே கண் வலி வந்துவிடுகிறது.

காவல் அதிகாரி ரோணாவாக வரும் சுதீப் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். குறிப்பாக அந்த நீளமான கடைசி சண்டைக் காட்சி. அந்தக் காட்சியில்தான் ரோணாவின் இன்னொரு பரிமாணம் வெளிப்பட, ரசிகர்கள் சற்று புரிந்த மாதிரி நிமிர்ந்து உட்கார்வதைப் பார்க்க முடிந்தது!

ரா ரா ராக்கம்மா பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கும் ஜாக்குலின் மட்டுமல்ல, இசையமைத்திருக்கும் அஜ்னீஷும் கவர்கிறார். பின்னணி இசையும் மோசமில்லை.

‘அதியுச்ச கற்பனைப் படம் (அதாங்க ஃபேன்டசி!)… அதனால் விதி மீறல்கள், முரண்களைப் பார்க்கக் கூடாது’ என்று சிலர் சொல்லக் கூடும்…. ஏதாவது ஓரிரு காட்சிகள் அப்படி இருந்தால் பரவாயில்லை… படம் முழுக்கவே அப்படி இருந்தால் என்ன செய்வது!

ஒரு 20 நிமிடக் குழப்பக் காட்சிகளை வெட்டியிருந்தால், இந்த ரோணாவை வேணா என்று சொல்லாமல் ரசித்திருக்க முடியுமோ!

Rating: 2.0/5.0