தமிழ் சினிமாவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் நடிகர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார் ஒரு நடிகர். அதுவும் நாயகனாக நடித்த முதல் படம் வரும் முன்பே வாய்க் கொழுப்பு நடிகர் என்ற பெயரையும் சம்பாதித்துவிட்டார். அவர் பெயர் அஸ்வின் குமார். நடித்துள்ள படம் என்ன சொல்லப் போகிறாய். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் அவர் தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார்.

திரைத் துறையில் எப்பேற்பட்ட நடிகராக, கலைஞராக இருந்தாலும், இயக்குநர்களுக்கென்று ஒரு மரியாதை உள்ளது. இயக்குநரைதான் ஒரு கப்பலின் கேப்டன் ரேஞ்சுக்கு மதிக்கிறார்கள். பொதுமேடையில் இந்த இயக்குநர் சொன்ன கதை படுமோசம்… எனக்கு தூக்கம் வந்துடுச்சி என்றெல்லாம் நடிகர்கள் பேசியதில்லை. பேசவும் மாட்டார்கள்.

ஆனால் அஸ்வின்குமார் பேசியிருக்கிறார். அவர் பேசியதன் ஒரு பகுதி இது: “என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான்.”

நிகழ்ச்சிக்குப் போய், இதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்ட பத்திரிகையாளர்கள், திரையுலகப் பிரபலங்கள் பலரும் நடிகரின் பேச்சைக் கேட்டு எரிச்சலடைந்திருக்கிறார்கள். தங்கள் எரிச்சலை சமூக வலைத் தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். 

இதே நிகழ்ச்சியில் இவருக்கு அகில இந்திய அளவில் ரசிகர் மன்றங்கள் இருப்பதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது இன்னொரு காமெடி.

சில ஆண்டுகளுக்கு முன்பு, வெகுவேகமாக வளர்ந்து கொண்டிருந்த ஒரு நடிகர், தான் நடித்த படத்தின் செய்தியாளர் சந்திப்பிலேயே, “இந்தப் படத்தின் மீது நம்பிக்கையில்லை… இது ஓடாது” என்று பகிரங்கமாகப் பேசினார். அந்தப் படம் ஓடாதது மட்டுமல்ல, அதற்குப் பிறகு அவருக்கு அப்படி ஒரு மேடையே கிடைக்காமல் போய்விட்டது என்ற உண்மையை அஸ்வின் குமார்கள் உணர்வார்களா?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *