‘₹.2000’ இந்த தலைப்பில் நேற்று ஒரு படம் பார்த்தேன். படத்தின் புகைப்படங்கள், விளம்பரங்கள், அதில் நடித்திருப்பவர்கள் இவற்றை வைத்து சரியான உப்புமா படம் என்கிற மனநிலையோடுதான் படத்திற்கு சென்றேன். ஆனால் அந்த நினைப்பை படம் ஓடத் தொடங்கிய 5வது நிமிடத்திலேயே மாற்ற வேண்டியதாகி விட்டது.

நாட்டுக்கு வாய்த்த நல்லவர் நரேந்திரமோடி திடீரென ரூபாய் நோட்டு மதிப்பிழப்பை கொண்டு வந்து விட்டு, கலர், கலராய் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து விநியோகித்த நேரம்… அந்த நோட்டு சாயம் போகுமோ என பொதுமக்கள் அஞ்சி தண்ணீரில் கழுவிப் பார்த்துக் கொண்டிருந்த காலம்…

ஒரு ஏழை விவசாயி மரணத்தின் விழிம்பில் கிடக்கும் தனது குழந்தையை காப்பாற்ற தனது கணக்கில் உள்ள 2 ஆயிரத்தை எடுக்க ஏடிஎம் செல்கிறார். அப்போது ஒரே ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஏடிஎம்மில் கிடைக்கிறது. அதில் பேனாவால் எழுதப்பட்டிருப்பதால் மெடிக்கல் ஸ்டோர்காரர் வாங்க மறுக்கிறார், வங்கி மாற்றித் தர மறுக்கிறது, இந்த தாமதத்தால் குழந்தை இறந்து விடுகிறது.

இந்தப் பிரச்சினையை பாலன் என்கிற வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு கொண்டு வருகிறார். உயிர்காக்கும் மருந்து வைத்திருக்காத மருத்துவமனை நிர்வாகம் முதல் ஏடிஎம் நிறுவன தலைவர் வரை அனைவரையும் கூண்டில் நிறுத்தி விசாரிக்கிறார் பாலன். இதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் திரைக்கதை, காட்சி அமைப்பு அனைத்தும் ஒரு மேடை நாடகத்தின் தன்மையை விட மோசமாக கையாளப்பட்டிருக்கிறது. வழக்கறிஞராக நடித்திருக்கும் கிருஷ்ணகுமாரும், நீதிபதியாக நடித்திருக்கும் ஓவியாவும் தவிர மற்ற யாருக்குமே நடிப்பு சுத்தமாக வரவில்லை.

2 ஆயிரம் ரூபாய் இல்லாத ஏழை விவசாயி படம் முழுக்க மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி சட்டையில் வருகிறார். இப்படி ஆயிரத்தெட்டு குறைகள் இருந்தாலும்… படத்தின் பேசு பொருளும், வசனங்களும் சீட்டில் உட்கார வைக்கிறது.

நல்ல திரைமொழியில் சொல்லப்பட்டிருந்தால் இன்னொரு ஜெய்பீமாக வந்து விவாத அலைகளை ஏற்படுத்தி இருக்கும்.

என்ன சொல்கிறோம் என்பதை விட அதை எப்படிச் சொல்கிறோம் என்பதில் இருக்கிறது சினிமாவின் சூத்திரம்.

– மீரான்
மூத்த பத்திரிகையாளர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *