டி ராஜேந்தருக்கு என்னாச்சு?

1

சென்னை: தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாகத் திகழ்ந்த டி ராஜேந்தர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போரூர் தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறார்.

மேலோட்டமான செய்தி இவ்வளவுதான்.

உண்மையில் டி ராஜேந்தருக்கு என்ன நோய்… அவரது உடல் நிலை, சுய நினைவு எந்த அளவுக்கு உள்ளது?

டி ராஜேந்தருக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போதே அவருக்கு ஆஞ்சியோவும் செய்யப்பட்டுவிட்டது. அந்த நேரத்தில் சிம்பு லண்டனில் இருந்தார். எனவே டி ராஜேந்தர் உடல் நிலை குறித்த தகவலை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். செய்தி அறிந்த சில மீடியாக்களையும் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டது ராஜேந்தர் தரப்பு.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராஜேந்தருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, உடல் நிலை மோசமடைந்துள்ளது. இம்முறை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகள் செய்ததில் அவருக்கு வயிற்றில் புற்றுநோய் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கான சிகிச்சையை வெளிநாட்டில் வைத்து அவருக்குத் தரலாம் என அவரது மகன் சிம்பு உள்ளிட்டோர் முடிவெடுத்துள்ளனர். ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவுக்கு அவரை அழைத்துச் செல்லவும் ஆலோசனை நடந்து வருகிறது.

டி ராஜேந்தகருக்கு உடல் ரீதியாக இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் குடும்பத்தினரை தைரியப்படுத்தி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.