தன்மானம் இல்லாத கூட்டம்தான் திமுகவை விமர்சிக்கிறது! – முக ஸ்டாலின்

1

கோவை: கோவை மாவட்டத்துக்கு 3 நாள் பயணமாகச் சென்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். முதல் நிகழ்ச்சியாக இன்று கோவை ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட உதவிகளழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 பயனாளிகளுக்கு ரூ.588 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன் ரூ.272 கோடியில் முடிவுற்ற 229 பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.663 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினர்.

இதையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:

“தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து 15 மாதங்களில் கோவை மாவட்டத்துக்கு 5 முறையாக வந்துள்ளேன். இந்த மாவட்டம் மற்றும் மக்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பின் அடையாளம்தான் இது. அரசு விழா என்பதை விட கோவை மாநாடு என்று சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் எதிர்கால தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை உங்கள் முகத்தில் பார்க்கும் மகிழ்ச்சியில் மூலம் அறிந்து கொள்கிறேன்.

கழகம் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. தமிழ்மக்கள் வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டு வருகிறோம். இதில் எந்தநாளும் மாறுபாடு இருக்காது என்பதை உறுதியோடு தெரிவிக்கிறேன். பலவேறு மாநில அரசுகளும் தமிழ்நாடு அரசின் முற்போக்கான திட்டங்களை உன்னிப்பாகக் கவனித்து, அதனை தங்கள் மாநிலத்திலும் பின்பற்றுகின்றனர். இதனை இங்கு இருக்கும் சிலரால் தாங்கி கொள்ள முடியவில்லை. பொத்தாம் பொதுவாக எந்த வாக்குறுதியும் தி.மு.க. நிறைவேற்றவில்லை என்கின்றனர். அவர்களைப் பார்த்து நான் கேட்பது மக்களோடு மக்களாக வந்து அவர்களிடத்தில் கேட்க வேண்டும். ஏதோ பேட்டி கொடுக்க மட்டும் வீட்டை விட்டு வெளியில் வந்து, அதன்பின்னர் உள்ளே செல்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது. தமிழ்நாட்டு மக்கள் அடையும் நன்மைகளை உங்களால் அறியமுடியாது.

இன மானம், தன்மானம் இரண்டையும் பற்றி கவலைப்படாதவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று பெரியார் சொன்னார். அந்த வகையில் தான் தன்மானம் இல்லாத இனமானம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டம் தான் தி.மு.க. ஆட்சியை விமர்சிக்கிறது. இனமானம், தன்மானம் பற்றி கவலைப்படாதவர்களின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

திமுக ஆட்சி என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒளிதரும் ஆட்சி. தி.மு.க. ஆட்சி அடக்கப்பட்டவர்களை அரவணைத்து நன்மை செய்யும் ஆட்சி. பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியின மக்களின நல்வாழ்வுக்காக அமைந்த அரசு இது. சிறுபான்மை, பெரும்பான்மை சமூகத்திற்கான ஒற்றுமை எந்தகாலத்திலும் நமது மாநிலத்தில் சிதைந்துவிடக்கூடாது என்று நினைக்கும் சகோதரத்துவ அரசுதான் தி.மு.க. அரசு. அனைவருக்குமான அரசாக தி.மு.க செயல்படுகிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பாராமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் 1½ ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

திமுக ஆட்சிக்கு வந்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி, தமிழ்நாட்டை வளம் கொண்ட மாநிலமாக மாற்றியுள்ளோம். மீதமுள்ள ஆட்சிக்காலத்தில் உலகத்திலேயே வளமான சிறப்பான முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு இருக்கும். இந்த கோட்பாடு, சிந்தனை நிறைவேறக்கூடாது என சிலர் என்னை விமர்சனம் செய்கின்றனர். விமர்சனத்தில், விமர்சனங்களால் வளர்ந்தவன் நான். எதிர்ப்பை அடக்குமுறையை மீறி வளர்ந்தவன். என்னை எதிர்த்தால் தான் உற்சாகமாக செயல்படுவேன். ஆனால் மக்களுக்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன். சொந்தக் கட்சியின் அதிகார போட்டியையும், தங்களது கையாளகாத தானத்தையும் மறைக்க தி.மு.க.வை விமர்சனம் செய்கின்றனர். தி.மு.க.வை விமர்சனம் செய்யும் தகுதி, யோக்கியதை யாருக்கும் கிடையாது.”