நயன்தாரா நடிப்பில் O2: வெளியானது புதிய பட முன்னோட்டம்

1

மிழில் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் ஜிஎஸ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு இணைந்து தயாரித்திருக்கும் திரில்லர் டிராமா திரைப்படம்  ‘O2’ திரைப்படத்தை ஜூன் 17 அன்று வெளியிடுகிறது.

இயக்குநர் விக்னேஷ் ஜிஎஸ் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா ஆர்கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிகொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை, பஸ்ஸில் மாட்டிக்கொண்ட மற்றொரு பயணியான காவல் அதிகாரி குறி வைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதை பரபரப்பாக சொல்லும் படம் தான்  “O2”. தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, ஆர்என்ஆர் மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர். 

வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குநர் விக்னேஷ் ஜிஎஸ். பல கதைகள் எழுதினாலும், இயற்கையின் மீதான ஆர்வத்தாலும், மானுடம் மீதான அக்கறையாலும் ஆக்ஸிஜன் பின்னணியில் இந்தக் கதையினை உருவாக்கியுள்ளார். ஓ2 கதையினை கேட்டவுடனே நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷை பாராட்டி, உடனடியாக இப்படத்திற்கு தேதிகள் ஒதுக்கி தந்துள்ளார். மேலும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும் இந்தக் கதையினைக் கேட்டுவிட்டு புதுமையான களமாக இருந்ததால் உடனடியாக தயாரிப்பில் இறங்கியுள்ளது.

இப்படத்தின் 70%-க்கும் மேலான காட்சிகள் பேருந்துக்கு உள்ளேயே  நடப்பதாக இருக்கும். இதற்கு தத்ரூபமாக தனது கலை வடிவமைப்பின் மூலம் வலுச் சேர்த்துள்ளார் கலை இயக்குநர் சதீஷ் குமார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளும் மிக சவாலானதாக அமைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக இப்படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் தரத்தை பல படிகள் உயர்த்தும் படைப்பாக இருக்கும்.
 
இத்திரைப்படம் ஜூன் 17 ஆம் தேதி பிரத்யேகமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் விக்னேஷ் ஜிஎஸ் கூறுகையில், “இந்த கதையை குறுகிய காலத்தில் முடிக்க காரணம் தயாரிப்பாளர்தான். இந்த கதையை உள்வாங்கி அதற்கேற்ற வகையில் ஆக்‌சன் இயக்குநர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் தமிழ் இந்த படத்திற்கு பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். படம் சிறப்பாக மாற காரணம் எடிட்டர். இந்த கதை வித்தியாசமான ஒன்று. அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது தயாரிப்பாளர்கள் தான். நயன்தாரா மேடம் சிறப்பான நடிகை, அவர் நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். அவர் என் மேல் முழு நம்பிக்கையையும் வைத்திருந்தார். அவர் தான் இந்த படத்தின் ஆக்சிஜன். இந்த படம் ஒரு குழுவாக உருவாக்கப்பட்டது. இந்த படம் வலிமையான  பெண்களுக்கு சமர்ப்பணம். அனைவருக்கும் நன்றி,” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசுகையில், “பிரியாணி படத்தின் போதே ஒளிப்பதிவாளர் தமிழ் எனக்கு தெரியும். அவர்தான் இயக்குநரை அறிமுகம் செய்தார். படம் எடுக்கலாம் என முடிவெடுத்த பின் இயக்குநர் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் எனக் கேட்டார். அதற்கு நயன்தாரா அவர்களும் ஒத்துகொண்டார். அவர் இதுபோன்ற கதையில் நடிக்க முடிவெடுத்தது பெரிய விஷயம். குறைந்த நடிகர்கள் இருக்கும் இந்த கதையில், சிறப்பான ஆட்களையே தேடி தேடி போட்டுள்ளோம். இந்த படம் எங்களுக்கு திருப்திகரமாக வந்துள்ளது. இந்த படம் ஒடிடியில் வருவது நாங்கள் முன்னரே முடிவெடுத்த விஷயம். இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும். படம் பார்த்து நீங்கள் ஆதரவு தர வேண்டும்,” என்றார்.