அதிமுக வழக்கு… எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவாக தீர்ப்பு!

1

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், சி.ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண் உள்ளிட்டோரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வைரமுத்து தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலை சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டது.

அதில், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு வெளியானதும் எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில், ஓ பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இப்போது நீதிமன்ற உத்தரவுப்படி, அந்தத் தீர்மானமும் செல்லும் என்றாகிவிட்டது. இனி ஓபிஎஸ் கட்சியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.