பெரியாரும் பிள்ளையாரும்… மிரட்டும் வணங்கான் முதல் தோற்றம்!

1

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘வணங்கான்’ திரைப்படத்தின் முதல் தோற்ற வடிவமைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் அருண் விஜய் உடல் முழுவதும் சகதியுடன் ஒரு கையில் பெரியார் சிலையையும் மற்றொரு கையில் பிள்ளையார் சிலையையும் வைத்திருப்பது போன்று இடம்பெற்றுள்ளது. இந்த வடிவமைப்பு தற்போது இணையத்தில் தீப்பரவலாகி வருகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

“இங்கு காலத்தை வெல்வது முக்கியம். நம் முன்னே எத்தனை சமர் வரினும் நின்று எதிர்கொண்டு இன்று தனக்கென படைப்பாற்றலில் மிகச் சிறந்த இடத்தை தக்க வைத்திருக்கும் நம் தமிழ்சினிமாவின் வரம், இயக்குநர் அண்ணன் பாலா அவர்கள்.

அவரது இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன.
அதேபோல இன்று #வணங்கான் படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒரு கதையைத் தொட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். சகோதரர் அருண்விஜய்க்கு இது மற்றுமொரு பெயர் சொல்லும் அவதாரம்.

இனி உங்கள் கோணத்திற்கே விட்டுவிடுகிறேன்.

-சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர் / இயக்குநர்