வெறும் ஒன்பது கதாபாத்திரங்களை ஒரு சிறு படகில் வைத்துக் கொண்டு 125 நிமிடங்களை சுவாரஸ்யமாய் கொண்டு செல்ல முடியுமென்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் சிம்புத்தேவன். தரவுகளோடு கூடிய கூர்மையான வசனங்கள் திரைப்படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன உடன் யோகிபாபு தனது நடிப்பினால் அசத்தியிருக்கிறார்.
பிழைப்பிற்காக வெளியூர்களிலிருந்து நகரத்திற்குள் படையெடுக்கும் கூட்டமும், பெரும் வணிகங்களும், தொழிற்சாலைகளும், நகர விரிவாக்கமும் ஒவ்வொரு நகரத்திலும் வசிக்கும் பூர்வகுடிகளை என்ன செய்கிறது? நகரின் மையத்தை விட்டு வெளியே நகர்த்தப்படும் போது உளவியல் ரீதியாய் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் என்ன? தலைமுறை தலைமுறையாய் ஒரு இடத்தில் வசித்து விட்டு ஒரு தொழிற்சாலைக்காகவோ அல்லது அரசின் திட்டத்திற்காகவோ தனது வாழ்வாதாரத்தை விட்டு நகரும் போது அவனுக்கு கொடுக்கப்படும் இழப்பீடு நியாயமானதாய் இருந்திருக்கிறதா என்றெல்லாம் இத்திரைப்படம் யோசிக்க வைத்திருக்கிறது.
எனது அனுபவத்தில் நான் நூறு பேரிடம் பேசியிருக்கிறேன் என்றால் அதில் 2 பேர்தான் இதுவரையில் சென்னை எனது சொந்த ஊர், நானும் என் அப்பனும், தாத்தனும், பாட்டனும் அங்கேதான் பிறந்து வளர்ந்தோம் என்று கூறியிருக்கிறார்கள். வளர்ந்து பெருநகரமாய் மாறியிருக்கும் நகரங்களின் மையத்தில் பூர்வகுடிகள் இப்போது இல்லை என்பதுதான் கசக்கும் உண்மை. அதிலும் யாராவது ஒருவர், இருவர் எனது பூர்வீகம் சென்னை என்று சொன்னால் மீண்டும் இரண்டு முறை மறுபடி கேட்பேன் நிஜமாகவே நீங்கள் சென்னைதானா என்று, ஏனென்றால் சென்னை யாருடைய பூர்வீகமாக சொந்த நிலமாக இருக்கமுடியாது என்று ஏனோ ஒரு எண்ணம் எல்லோருக்குள்ளும் விதைக்கப்பட்டுவிட்டது.
இந்தத் திரைப்படம் சென்னையின் பூர்வகுடிகள் பற்றி மென்மையாய் கேள்வி கேட்டிருக்கிறது. அது இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் சொல்லப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம். ஆனாலும் மிகப்பெரிய பொருட்செலவில், வன்முறையாட்டங்களோடு தமிழ் சினிமாவிற்கு வேறு பிம்பத்தைக் கட்டமைக்க முயலும் பெருமுதலாளிகள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு மத்தியில்…
எளிமையான நடிகர்கள், தேர்ந்தெடுத்த கதைக்களம், (1943ல் கதை நிகழ்கிறது), லாவகமான திரைக்கதை, கதைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு இசை என்று போட் மனதைக் கவர்கிறது. அமீரகத்தில் இந்தப் படத்திற்கு அதிக திரையரங்குகளோ காட்சிகளோ கிடையாது. புகழ்பெற்ற நடிகர்களின் வியாபார வசீகரத்துக்கும் நெருக்கடிக்கும் நடுவே ஆங்காங்கே சில திரையரங்கங்களில் ஒரு காட்சியை மட்டும் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். எல்லா சரியில்லாததையும் பற்றியே பேசி அவற்றைப் பேசுபொருள் ஆக்குவதால் சரிகளை பற்றி பேசுவதை யாரும் விரும்புவதில்லை ஏனென்றால் எதிர்மறையான எண்ணங்கள்தான் எளிதில் எல்லோரையும் வசீகரித்து, புத்தியைக் கூறு போட்டு மனதை உடைத்து குறைகளைப் பற்றியே பேசும் எழுதும் ஒரு நோய்மையை உண்டாகிவிடுகிறது. இதிலிருந்து மீள வேண்டுமென்றால்..
எல்லோரும் இது போன்ற திரைப்படங்களைப் பேசினால், எழுதினால் தமிழ்த் திரைக்களம் பெரும்பான்மை எதை விரும்புகிறதோ அதைத் திரைப்படமாய் எடுக்க ஆரம்பிக்கும்.
போட் திரைப்படத்தை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.
– தேவா சுப்பையா
போட் டிரைலர்