இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த ‘பதாய் ஹோ’ படத்தை தமிழில் வீட்ல விசேஷம் என்ற தலைப்பில் போனி கபூர் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், ஊர்வசி, ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 17-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே நல்ல விமர்சனங்கள் வந்தன.
வசூல் ரீதியாகவும் இந்தப் படம் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களை மக்ழ்ச்சிக்குள்ளாக்கி்யுள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே 1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஒரு வார முடிவில் படம் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட ஒரு படம் இந்த அளவுக்கு வசூலித்திருப்பது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் வெற்றகரமான 2வது நாள் என விளம்பரம் செய்யும் இந்த காலத்தில், வீ்ட்ல விசேஷம் படம் செய்திருப்பது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர்களில் ஒருவரும், நாயகனுமான ஆர்ஜே பாலாஜி கூறுகையில், “இது எங்களின் மூன்றாவது தொடர் வெற்றி. அதுவும் நிஜமான வெற்றி. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ரீமேக் படம்தானே சீக்கிரம் முடித்துவிடலாம் என்றுதான் முதலில் நினைத்திருந்தோம். ஆனால் தமிழுக்கேற்ப பல காட்சிகளை எழுதினோம். படத்தை முழுக்க முழுக்க நமது சூழலுக்கு மாற்ற நிறையவே நேரம் தேவைப்பட்டது. அதனால்தான் இத்தனை மாதங்கள் எடுத்துக் கொண்டோம்,” என்றார்.
ஆர்ஜே பாலாஜி பகிர்ந்து கொண்ட இன்னொரு முக்கிய தகவல்: நடிகர் விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறாராம். கதையும் அவருக்குப் பிடித்துவிட்டதாம். ஆனால் அடுத்த கட்டத்துக்கு போக இன்னும் ஒரு ஆண்டு தேவை எனக் கூறிவிட்டு வந்திருக்கிறாராம் பாலாஜி.