நடிகர்கள்: அஜித் குமார், ஹ்யூமா குரேஷி. கார்த்திகேயா
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: போனி கபூர் – ஜீ டிவி
எழுத்து, இயக்கம் – ஹெச் வினோத்
அஜித் குமார் நடித்த படங்களிலேயே அதிக எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய படம் வலிமையாகத்தான் இருக்கும். திரையரங்குகள் பக்கம் வரவே ரசிகர்கள் தயக்கம் காட்டி வந்த சூழலில், அண்ணாத்த படம் அவற்றுக்கு ஆக்சிஜன் தந்தது. இப்போது வலிமை இன்னும் ஊக்கம் தந்திருக்கிறது.
படத்தின் கதை புதிதா… வித்தியாசமானதா என்றெல்லாம் இனி பார்க்க ஆரம்பித்தால், அத்தனைப் படங்களின் கதைகளும் எங்கோ எப்போதோ படித்தவை பார்த்தவைகளாகத்தான் இருக்கும். வலிமையின் கதையிலும் புதிதாக ஒன்றுமில்லை. ஆனால் அதைச் சொன்ன விதம் புதிது, குறிப்பாக முதல்பாதி வரை.
நேர்மையான் காவல் அதிகாரி, நகரில் மிதமிஞ்சிய போதை மருந்து புழக்கம், அதைக் கட்டுப்படுத்த காவல் அதிகாரி எடுக்கும் உக்கிரமான நடவடிக்கைகளால் ஆத்திரமடையும் எதிர்நாயகன் கும்பல், அதிகாரியின் குடும்பத்தைக் கடத்தி கொலை மிரட்டல் விடுப்பதும், அவர்களை நாயகனான அதிகாரி எப்படிக் காப்பாற்றினார் என்பதும்தான் கதை. என்ன…. இதான் கதையா என்றுதானே கேட்கத் தோன்றுகிறது!
இன்றைக்கு, ‘பணம் சம்பாதிக்க வேண்டும், அதுவும் சுலபமான வழியில் – அது குறுக்கு வழியா, நேர்மையானதா, சட்ட விரோதமா என்று பார்க்கத் தேவையில்லை – எக்கச்சக்கமாய் சம்பாதிக்க வேண்டும்… பெரிதாக உடல் உழைக்க வேண்டியதில்லை… அதற்கு வாய்ப்பிருக்கிறதா?’ என்று பார்க்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வீடியோ கேம்கள், ஆன்லைன் விளையாட்டுகள், ‘டார்க் வெப்சைட்ஸ்’ எனும் இருட்டு உலக இணைய வழிகளில் மூழ்கிக் கிடப்பவர்கள். இவர்களின் உலகத்தின் ஒரு சிறுபகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர் வினோத், வலிமை படத்தில்.
போதை மருந்து கடத்துவதில் இப்படியெல்லாம் கூட வழிகள் இருக்கிறதா, இந்த மாதிரி கூட அடிமைகள் இருக்கிறார்களா என கேட்க வைக்கின்றன முதல் பாதியில் ‘சூப்பர் பைக்கர்களாக’ வரும் சாத்தானின் அடிமைகள் செய்கிற சாகசங்கள். சேஸிங் எனும் வாகனத் துரத்தலை இந்த அளவுக்கு வேறு எந்தப் படத்திலும் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள். அப்படி ஒரு உச்சபட்ச காட்சி அமைப்புகள். குறிப்பாக அந்த கைதிகளை மீட்க வரும் சூப்பர் பைக்கர்கள், அவர்களிடமிருந்து தப்பிக்க அஜித் காவல் வண்டியை ஓட்டும் காட்சி.
காவல் அதிகாரி அஜித், அந்த போதை மருந்து கடத்தல் வலையமைப்பையே சிதறடித்து, அந்த சாத்தானையே கைது செய்து காலை உடைக்கும்போதை கதை முடிந்துவிடுகி்றது. அதன் பிறகு அவர்கள் தப்பிப்பது, உச்சக்கட்ட தாய்ப்பாச நெகிழ்வுக் காட்சிகள் அடுத்த ஒன்றரை மணி நேரத்தைக் கடத்தவே உதவுகின்றன. எனவே அவற்றை விரிவாக அலச வேண்டியதில்லை.
ஒரு நேர்மையான காவல் அதிகாரி வேடம். அஜித் குமார் அதில் குறை வைக்கவில்லை. பரபர சண்டைக் காட்சிகள், விறு விறு துரத்தல் காட்சிகளே அதிகம் என்பதால், அவர் கஷ்டப்பட்டு முகத்தில் உணர்வுகளைக் காட்ட வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. பைக் சாகசக் காட்சிகளில் கிட்டத்தட்ட பல இடங்களில் அவர் தாமே அவற்றைச் செய்திருப்பதையும் பார்க்க முடிகிறது. தாய் பாசம், தம்பி மீதான அக்கறை காட்டும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.
படத்தில் நாயகி என்று யாரையும் சொல்வதற்கில்லை. சக அதிகாரியாக வரும் ஹ்யூமா குரேஷி அஜித்துக்கு தோழி. ஒருதலையாக காதலிக்கிறார்.
எதிர்நாயகனாக வரும் கார்த்திகேயா மிரட்டுகிறார். அவரது தோற்றம், உடல்வாகு, முகபாவங்கள் அனைத்தும் ஒரு பயங்கர வீடியோ கேம் வில்லன் போல அவரைக் காட்டுகின்றன. அஜித்தின் தம்பியாக வரும் ராஜ் அய்யப்பாவுக்கு நடிப்பைக் காட்டக் கூடிய ஒரு வாய்ப்பு. நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.
அஜித்தின் அம்மாவாக சுமித்ரா, இளவயது அஜித்துக்கு அம்மாவாக சுமித்ராவின் மகள் உமா என நடிகர் தேர்வில் சுவாரஸ்யம் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
எல்லா போலீஸ் கதைகளிலும் வருவதைப் போன்று இந்தப் படத்திலும் இரண்டு கள்ள காவல் அதிகாரிகள். அவர்களை முதல் காட்சியில் பார்க்கும்போதே, இவர்கள்தான் கறுப்பு ஆடுகள் என பார்வையாளர்களுக்குத் தெரிந்துபோகிறது. ஆனால் அத்தனை வலிமையான அதிகாரி அஜித்துக்கோ, உடனிருக்கும் கூர்மையான மூளைக்கார காவலர்களுக்கோ தெரியாமல் போவதுதான் ஆச்சர்யம்.
திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் ‘காமிக்ஸ் கேம்’களை நினைவூட்டுகின்றன. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு சில இடங்களில் அட சொல்ல வைக்கிறது. குறைந்தபட்சம் படத்தின் 30 நிமிடக் காட்சிகளையாவது பாரபட்சமின்றி நறுக்கியிருக்கலாம்.
யுவனின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும், பின்னணி இசையில் அவரது முத்திரை இல்லை (அதுமட்டும் ஜிப்ரானாம்!).
படத்தின் நிறைகுறைகளைப் பார்த்துவிட்டோம்… ஆனால் முக்கியமான ஒரு விஷயம்… சினிமாவுக்கேற்ற முழுமையான உடல்மொழியைக் காட்டக்கூடிய மிகச் சில நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் அஜித்குமார். அப்படியொன்றும் வயதாகிவிடவும் இல்லை. பொழுதுபோக்குதான் முதலில்… அதற்கப்புறம்தான் கருத்து சொல்வது அல்லது வேறு எந்த நோக்கமாக இருந்தாலும் என்பதே திரையுலகின் நிலைமை. நடைமுறை உண்மையும்கூட. சிட்டிசனுக்குப் பிந்தைய அவரது படங்களில் இந்த தன்மையை அதிகம் பார்க்க முடிந்தது. ஆனால் விவேகம், நேர் கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களில் பொழுதுபோக்கை முற்றாக ஓரம்கட்டிவிட்டு, தன் தோற்றத்திலும் சிரத்தை காட்டாமல், எந்திரத்தனமான ஒரு உடல் மொழியுடன் அவர் தோன்றுவது பொதுவான ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருகிறது என்ற உண்மையை அவர் புரிந்து கொள்வாரா?
Rating: 3.0/5.0
எஸ். சங்கர்