95 சதவீதம் பலனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து…. அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

லகையே ஆட்டிப் படைத்த கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அவற்றில் ரஷ்யா முதல் முறையாக கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து, அதைப் பயன்பாட்டுக்கும் விட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்து 90 சதவீத அளவிற்கு கொரோனா தொற்றிலிருந்து காக்கும் என தெரிவிக்கப்பட்டது. இப்போது மாடர்னா நிறுவனம் தனது புதிய தடுப்பு மருந்தினை அறிவித்துள்ளது.

இது தங்களுக்கு `சிறந்த ஒரு நாள்` என மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில வாரங்களில் இந்த தடுப்பு மருந்தைப் பயன்படுத்தும் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இது ஆரம்பக் கட்ட தகவல்களே. பல முக்கிய கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை.

அமெரிக்காவில் 30 ஆயிரம் பேரிடம் இந்த தடுப்பு மருந்திற்கான சோதனை நடத்தப்பட்டது. இதில் பாதிபேருக்கு நான்கு வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் மருந்து வழங்கப்பட்டது. பிறருக்கு `டம்மி` ஊசிகள் வழங்கப்பட்டன.

கோவிட் அறிகுறிகள் உருவாகிய முதல் 95 பேரைக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் தடுப்பு மருந்து வழங்கப்பட்ட ஐந்து பேருக்கு மட்டுமே கோவிட் கண்டறியப்பட்டது. மீதமுள்ள 90 பேர் டம்மி ஊசிகள் கொடுக்கப்பட்டவர்கள். இந்த தடுப்பு மருந்து 94.5 சதவீத அளவு பாதுகாப்பு வழங்குகிறது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தடுப்பு மருந்து எவ்வளவு காலம் பலனளிக்கும் என்பது தெரியாது. அதற்குத் தன்னார்வலர்கள் நீண்ட நாட்களுக்குக் கண்காணிக்கப்பட வேண்டும்.

Corona virusCovid 19 VaccineModernaUSகொரோனாதடுப்பு மருந்துமாடர்னா
Comments (0)
Add Comment