லண்டன்: பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார்.
பால்மோரலில் இருந்து, ஓக் மரத்தில் செய்யப்பட்ட ராணியின் சவப்பெட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை எடின்பரோ நகருக்குச் செல்லப்பட்டது.
திங்கட்கிழமை பிற்பகல், அரச குடும்ப உறுப்பினர்களுடன் எடின்பரோவில் உள்ள செயின்ட் கில்ஸ் தேவாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட ராணியின் உடல்,. மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் 24 மணிநேரம் அங்கு வைக்கப்பட்டது. எடின்பரோவிலிருந்து விமானம் மூலம் லண்டன் கொண்டுவரப்பட்ட ராணியின் சவப்பெட்டி, பங்கிங்காம் அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இன்று புதன் கிழமை பிரிட்டிஷ் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு வெஸ்ட்மினிஸ்டர் அரங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நான்கு நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது.
19ஆம் தேதி 11 மணிக்கு நீண்ட நடை உள்பட விண்ட்சர் கோட்டை வரை ஊர்வலத்துடன் அரச இறுதிச் சடங்குகள் நடக்கும். விண்ட்சரில் உள்ள அரசர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் ராணி அடக்கம் செய்யப்படுவார்.
ராணியின் இறுதிச் சடங்கு நிகழ்வு அன்று ஐக்கிய ராச்சியத்தின் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து நாடுகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.