திருச்சிற்றம்பலம் பட விமர்சனம்

நடிகர்கள்: தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ்

ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்

இசை: அனிருத்

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

எழுத்து – இயக்கம்: மித்ரன் ஜவஹர்

மித்ரன் ஜவஹர் தனுஷ் படங்களை இயக்குவதற்கென்றே பிறந்தவர் போல. இதுவரை அவர் இயக்கியவை 6 படங்கள். அவற்றில் நான்கு தனுஷ் நடித்தவை. இன்னொன்று பெரும்பாலும் ரீமேக் கதைகளையே படமாக்கி வந்தவர் இப்போதுதான் ஒரிஜினல் கதையை இயக்கியிருக்கிறார்.

குடும்பப் பின்னணி, மென்மையான காதல், படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை… இதுதான் மித்ரன் ஜவஹரின் கதைக் கட்டமைப்பு. இந்தப் படத்தில் அப்படியே. ஆனால் இந்தப் படத்தில் அவரது பாத்திரத் தேர்வு பாதி வெற்றிக்குக் காரணமாகிவிடுகிறது.

உணவு விநியோகம் செய்யும் வேலைப் பார்த்து வரும் தனுஷுக்கு, அப்பா பிரகாஷ்ராஜ் மீது அளவற்ற கோபம். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பேசாமலிருக்கிறார். அவருடைய ஒரே ஆறுதல், மகிழ்ச்சி எல்லாம் பள்ளி தோழி நித்யா மேனன் மற்றும் தாத்தா பாரதிராஜா. இரண்டு காதல் தோல்விகளைச் சந்திக்கும் தனுஷ், தாத்தா யோசனைப்படி கடைசியில் தனது தோழியிடமே காதலைச் சொல்கிறார். அந்தக் காதலை தோழி ஏற்றாரா… தந்தையுடன் சமாதானமானாரா? என்பதுதான் திருச்சிற்றம்பலம் கதை.

எளிமையான கதை. ஆனால் அதைச் சொன்ன விதம், அதற்காக இயக்குநர் தேர்ந்தெடுத்த நடிகர்கள்தான் இந்தப் படம் அத்தனை சுவாரஸ்யமானதாக அமையக் காரணம்.

இந்த மாதிரி வேடங்களையெல்லாம் ஊதித்தள்ளி விடுகிற நடிப்பு அசுரன் தனுஷ். சர்வதேசப் படமாக இருந்தாலும் சரி, பக்கத்துவீட்டுப் பையன் மாதிரியான பாத்திரமானாலும் சரி, அப்படியே மாறிவிடும் அவரது நடிப்பு இந்த ‘பழம்’ பாத்திரத்திலும் ஜொலிக்கிறது.

தனுஷுக்கு நிகராக வெளுத்து வாங்கியிருப்பவர்கள் இருவர். பாரதிராஜா மற்றும் நித்யா மேனன். நண்பனின் ஆசைப்படியே அவன் காதலிக்கும் பெண்களுக்குத் தூது போய், அதில் தோற்றுத் திரும்பும் நிலையில், அவன் மீதான தன் காதலையும் சொல்ல முடியாமல் அவர் தவிப்பதும், குமுறித் தீர்ப்பதும் இணையற்ற நடிப்பு.

மகனுக்கும் பேரனுக்கும் இடையே அல்லாடும் பாசக்கார, குறும்புக்காரத் தாத்தா பாரதிராஜா, தன் காதல் அனுபவங்களைப் பேரனுக்குச் சொல்லும் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன.

கோபக்காரத் தந்தை பாத்திரம் பிரகாஷ் ராஜுக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால் தனது இயலாமையை மறைக்காமல், மகனிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.

ராஷி கன்னா, ப்ரியா பவானி சங்கருக்கு அதிக வேலை இல்லை என்றாலும் ஏற்ற பாத்திரத்துக்கு நேர்மையாக நடித்திருக்கிறார்கள்.

அனிருத்தின் இசை படத்துக்கும் தனுஷுக்கும் பெரும் பலம். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு தரம்.

படத்தில் சில காட்சிகள் தேவையற்றவை. குறிப்பாக தாத்தா பேரன் தண்ணியடிக்கும் காட்சி. தந்தைக்கும் மகனுக்குமான 10 ஆண்டு கோபத்துக்கான காரணத்தை இன்னும் வலுவாகக் காட்டியிருக்கலாம். என்றாலும் இவையெதுவும் குறையெனக் கூற முடியாத அளவுக்கு நிறைவைத் தந்துவிடுகிறது திருச்சிற்றம்பலம்.

Rating: 4.0/5.0

DhanushThiruchitrambalam movie reviewதனுஷ்திருச்சிற்றம்பலம் விமர்சனம்
Comments (0)
Add Comment