3இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளைராஜா. அவரின் சகோதரர் இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரன்.
கங்கை அமரனை பாடலாசிரியராக, பாடகராக, இயக்குநராக திரையில் அறிமுகப்படுத்தியவர் இளையராஜா.
16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற செந்தூரப் பூவே.. தான் கங்கை அமரன் எழுதிய முதல் பாடல். அந்தப் பாடல் தொடங்கி, ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை தன் அண்ணன் இசையில் எழுதியுள்ளார் கங்கை அமரன். இவற்றில் பெரும்பாலானவை மெகா ஹிட் பாடல்கள்.
இளையராஜா தயாரித்த கோழி கூவுது படத்தில் இயக்குநராக அறிமுகமான கங்கை அமரன், எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்பட பல படங்களை இயக்கினார். இவை அனைத்துக்கும் பெரும் பலமாய் அமைந்தது இளையராஜாவின் இசை. ஒருகட்டத்தில் இளையராஜாவின் இசைக்கூடத்தில் அவருக்கு உதவியாகவும், இசை நடத்துநராகவும் கூட கங்கை அமரன் பணியாற்றினார்.
இதற்கிடையில் சில வருடங்களாக இளையராஜாவும் அவரின் சகோதரர் கங்கை அமரன் பேசிக் கொள்வதில்லை என்ற செய்திகள் வெளியாகின. கங்கை அமரனும் இதுகுறித்து பல பேட்டிகளில் தனது ஆதங்கத்தைத் தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இளையராஜாவைச் சந்தித்துப் பேசியுள்ளார் கங்கை அமரன். இளையராஜாவின் சொந்த ஸ்டுடியோவில் நேற்று நடந்த இந்த சந்திப்பின் புகைப்படங்கள் இணையவெளியில் பெரும் பரபரப்புடன் வலம் வந்தன.
இந்த சந்திப்பு குறித்து மிகுந்த சந்தோஷத்தில் இருந்த கங்கை அமரனிடம் பேசினோம்.
“அண்ணன் அழைப்பதாக போனில் சொன்னார்கள். நான் இவ்வளவு காலம் அதற்குத்தான் காத்திருந்தேன். உடனே போய் சந்தித்தேன். ஒன்றரை மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தேன். பழைய நெருடல்கள் எதுவும் இல்லாமல் அண்ணன் அருமையாகப் பேசிக்கொண்டு இருந்தார். சிறு வயது சம்பவங்கள், கடந்த கால திரை அனுபவங்கள் என பலவற்றைப் பேசினார். இனிமேல் சந்தோஷமாக இணைந்திருப்போம்.
நாங்கள் இருவரும் 13 வருடங்களாகப் பேசாமல் இருந்தது பெரும் துயரம். இனிமேல் அது போல் நேராது. எனக்கு இப்போது சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சியாக வீட்டுக்குப் போகிறேன்,” என்றவரிடம். இளையராஜா இசையில் மீண்டும் எப்போது எழுதுவீர்கள் என்று கேட்டபோது,
“அண்ணன் எப்போது அழைத்தாலும் பாடல் எழுதுவேன், அவருக்கு எழுதாமல் வேறு யாருக்கு எழுதப் போகிறேன்..” என்றார் கங்கை அமரன்