தெற்கு ஆஸ்திரேலியாவை முடக்கிய ஒரு பொய்!

அடிலெய்ட்: தெற்கு ஆஸ்திரேலியாவில், ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களிடமிருந்து புதிய கொரோனா தொற்று பரவுவதாகத் தகவல் வெளியான நிலையில், அந்தப் பரவலைத் தடுக்க ஆறு நாள்கள் கடுமையான ஊரடங்கை அறிவித்தது தெற்கு ஆஸ்திரேலியா அரசு.

`ஒரு நாளைக்கு, ஒரு குடும்பத்தில், ஒருவர் மட்டுமே வெளியே வர வேண்டும். சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது, பொது இடத்தில் உடற்பயிற்சி செய்வது, திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. வணிக நிறுவனங்கள், வணிக மையங்களெல்லாம் மூடப்பட்டன. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அறிவிப்பு அமலுக்கு வந்த இரண்டு நாள்கள் கழித்துதான் ஓர் உண்மை வெளியானது. ஆட்சியாளர்களை அதிரவைத்த அந்த உண்மை ஒரு `பொய்.’

வெளிநாட்டிலிருந்து வரும் மக்களைத் தனிமைப்படுத்தப் பயன்படும் ஹோட்டலில் ஓர் உதவியாளர் வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து, மாநிலத் தலைநகர் அடிலெய்டில் இருபத்தி மூன்று பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், அது பரவலாக வெடிப்பதைத் தவிர்க்க `சர்க்யூட் பிரேக்கர்’ நடவடிக்கைகள் அவசியம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரத்தில் திடீரென்று உருவான இந்த ஒரு கிளஸ்டரின் தொடர்புகள் பற்றி விசாரிக்கையில், ஒருவர், `தான் அந்தக் கடையில் பீட்ஸா வாங்கி மட்டும் சென்றதாக’த் தெரிவித்திருக்கிறார். அவ்வளவு குறுகிய நேரத் தொடர்பில் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றால், கிருமியின் வீரியம் வலுத்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்த அதிகாரிகள், அதை உடனே தடுக்க இந்தக் கடுமையான ஊரடங்கை அறிவித்தனர்.

ஆனால் அவரைத் தொடர்ந்து கண்காணித்ததில், அவர் சொன்னது பொய் என்பது தெரியவந்தது. அவர் உணவக விநியோகப் பிரிவில் தொடர்ந்து வேலை செய்தது தெரியவந்தது. எனினும், சிறிய அளவிலேயே பரவல் இருந்திருக்கிறது. இதனால் கிருமியின் வீரியம் அதிகரித்திருக்கலாம் என்ற அதிகாரிகளின் கணிப்பும் பொய்த்தது. அவர் சொன்ன ஒரு பொய்யால் இத்தனை கட்டுப்பாடுகைளைப் போட்டதை நினைத்து கவலைகொண்டது அரசு. கடும் கட்டுப்பாடுகள் இந்த சனிக்கிழமையோடு விலக்கப்படும் என்று அரசு தரப்பு தெரிவித்திருக்கிறது.

இது குறித்து தெற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் கூறும்போது, “ஒருவர் சொல்லும் ஒரு பொய் 1.8 மில்லியன் மக்கள் வாழ்வை பாதிக்கிறது. பொய் சொல்வதற்கு இந்நாட்டில் இதுவரை தண்டனை ஏதும் இல்லை. ஆனால், இந்தநிலையில் அவரது பொய்க்கான தண்டனை அவருக்கு வழங்கப்படும்” என்றார். அந்த மாகாணத்தின் தற்போதைய நிலைப்படி 43 நோயாளிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விக்டோரியா, மெல்போர்ன் மாகாணங்களில் தொடர்ந்து புது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

Covid 19LockdownSouth Australiaஆஸ்திரேலியாகொரோனாமுழு முடக்கம்
Comments (0)
Add Comment