செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ‘ராஜ வம்சம்’ படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் – நடிகர் சசிகுமார் நடிக்க ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் .
தமிழ் சினிமாவில் இப்போதைய தலைமுறையில் நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குநர் சுந்தர் சி. அவரிடம் உதவி இயக்குநராக பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு. தன் பங்குக்கு இவர் இந்தப் படத்தில் 49 நடிகர்களை வைத்து இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குநர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை.
இந்தப் படத்தில் ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி, மணி சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தானலட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணி மேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என்று நீள்கிறது நட்சத்திரப் பட்டியல்.
சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார் .கலை இயக்கம் சுரேஷ் மற்றும் படத்தொகுப்பினை சபு ஜோசப் மேற்கொண்டுள்ளார் . நவம்பர் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாள்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது .
இதில் பங்கேற்ற நடிகர் சசிகுமார் பேசுகையில். “ஒரு கூட்டுக்குடும்பம் சம்பந்தப்பட்ட கதையை கதிர் என்னிடம் கூறினார். மிகவும் பிடித்திருந்தது. நானும் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன், வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த் அனைவரையும் அழகாக கேமராவில் காட்டியுள்ளார். எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்தில் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சாம் சி எஸ் பின்னணி இசை மிகப்பெரிய பலம். இப்படத்திற்கு இன்னொரு மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் டி டி ராஜா சார்.
ரஜினி சார் பேட்ட படத்தில் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். எவ்வளவு படங்கள் வேண்டுமானாலும் இயக்குங்கள், நடியுங்கள். ஆனால் படத்தை தயாரிக்க மட்டும் வேண்டாம் என்றார். எதற்கு சொல்கிறேன் என்றால் அதில் அவ்வளவு சிரமமும் பொறுமையும் திறமையும் வேண்டும். டி டி ராஜா சாருக்கு நன்றி. முதல்முறையாக நடிகர் சதீஷ் உடன் இணைந்து படத்தில் நடிப்பது மகிழ்ச்சி,” என்றார்.
நடிகை நிக்கி கல்ராணி பேசுகையில், “ராஜ வம்சம் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு கூட்டுக் குடும்பத்தில் வாழும் வாழ்க்கை கிடைக்கவில்லை. ஆனால் இப்படத்தில் ஒரு பெரிய வீட்டில் உண்மையாகவே ஒரு கூட்டுக் குடும்பம் போல் வாழ்ந்தது போல் இருக்கிறது. நடிகர் சசிகுமார் நடிப்பின் மூலம் பல அனுபவங்களை கற்றுக் கொடுத்தார் .இயக்குநர் கதிர் சுந்தர் சி யின் உதவியாளர். மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கதிர் பிடிவாதமாக இருந்தார். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்,” என்றார்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் சதீஷ், நடிகை ரேகா, இயக்குநர் கதிர்வேலு உள்ளிட்டோரும் பேசினர்.