ராயர் பரம்பரை பட விமர்சனம்

நடிகர்கள்: கிருஷ்ணா, சரண்யா, ராஜேந்திரன், ஆனந்தராஜ்
ஒளிப்பதிவு : விக்னேஷ் வாசு
இசை: கணேஷ் ராகவேந்திரா
இயக்கம்: ராம்நாத்

 

வேட்டைக்காரன்புதூரின் பெரிய மனிதர் ராயருக்கு காதல் என்றாலே பெரும் வெறுப்பு. காரணம் பல ஆண்டுகளுக்கு முன் அவரது தங்கை காதல் வயப்பட்டு ஒருவருடன் ஊரைவிட்டே ஓடிவிடுகிறார். ஊரில் காதலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் அளவுக்குப் போகிறது அவரது சண்டியர்தனம். அவருக்கு ஒரே மகள். இசைக் கல்லூரியில் பட்டம் படித்துவிட்டு ஊருக்கு வருகிறார். அதே ஊருக்கு வரும் கிருஷ்ணா, நண்பருடன் தங்கி இசை வகுப்புகளை நடத்துகிறார்.

கிருஷ்ணாவுக்கும் ஆனந்தராஜ் மகளுக்கும் எதிர்ப்பார்த்தது போலவே காதல் மலர, ஆனந்தராஜிடம் மாட்டிக் கொள்ளாமல் ஊரைவிட்டு ஓடுகிறார்கள், மொட்டை ராஜேந்திரன் உதவியுடன். இறுதியில் காதலர்கள் ஒன்றுசேர்ந்தார்களா… ஆனந்தராஜ் என்ன செய்தார் என்பது மீதிக் கதை.

தொன்னூறுகளில் வெளியான கிராமத்துப் படங்களின் அதே பார்முலா. இன்றைய தேதிக்கு ஏற்ப இன்னும் கூட திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கலாம் இயக்குநர்.

கிராமத்து இளைஞன் வேடத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார் கிருஷ்ணா. காதல், அடிதடியில் கலக்கும் அவர், நகைச்சுவைக் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மொட்டை ராஜேந்திரனுடன் அவர் பண்ணுகிற அலப்பறை சற்றே ரசிக்க வைக்கிறது. நாயகி சரண்யா அழகு, நடிப்பு இரண்டிலுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், மனோபாலா, சேஷு, ஆர்என்ஆர் மனோகர் என உடன் நடித்த அனைவருமே காட்சிகள் சலிப்படைய வைக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். கேஆர் விஜயா தன் பண்பட்ட நடிப்பால் பரவசப்படுத்துகிறார். இதுபோன்ற மூத்த கலைஞர்களை திரையில் பார்க்கவே அத்தனை மகிழ்வாக இருக்கிறது.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவும் உறுத்தவில்லை.

ரசிகர்களை யோசிக்கவிடாமல் சிரிக்க வைக்க வேண்டும் என்பதுதான் இயக்குநர் ராம்நாத்தின் ஒரே நோக்கம் போலிருக்கிறது.

மதிப்பீடு: 3.0/5.0

Rayar Parambarai Movie reviewராயர் பரம்பரை விமர்சனம்
Comments (0)
Add Comment