கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. ‘கன்னி பருவத்திலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘மகாநதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். மேலும், முன்னணி நடிகர்கள் பலரையும் தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் இன்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பாரதிராஜா, “16 வயதினிலே’ திரைப்படத்தின் வாயிலாக என்னை இயக்குநராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி எஸ்ஏ ராஜ்கண்ணு மறைவு, பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்,” என பதிவிட்டுள்ளார்.
கமல் ஹாஸன்
நடிகர் கமல் ஹாஸன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார். என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை. அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “தமிழ் திரையுலகில் தனது நிறுவனத்திற்காக மக்கள் போற்றும் வகையில் தரமான படங்களை தயாரித்து வெளியிட்ட எஸ்.ஏ.ராஜ்கண்ணு காலமானார் என்ற செய்தி திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஏ. ராஜ்கண்ணு தமிழ் திரையுலகின் அடையாளமாக நம்மிடையே வாழும் பாரதிராஜாவை ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தியவர்.
‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் நடிகர் சுதாகர், நடிகை ராதிகாவை அறிமுகப்படுத்தியவர். ‘கன்னிப்பருவத்திலே’ திரைப்படத்தில் கே.பாக்யராஜை வில்லனாக வேறு ஒரு அவதாரத்தில் நடிக்க வைத்தவர். பி.வி.பாலகுருவை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர். இந்த திரைப்படத்தில் தான் வடிவுக்கரசியை கதாநாயகியாக அறிமுகபடுத்தியவர்.
மேலும்,கமலஹாசனுக்கு திருப்புமுனையாக அமைந்த ‘மகாநதி’ திரைப்படத்தினை தயாரித்தவரும் இவர்தான். ‘வாலிபமே வா’, ‘பொண்ணு புடிச்சிருக்கு’, ‘ எங்க சின்ன ராசா’ போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்து தனது அம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு தனிமுத்திரை பதித்து சென்றுள்ள எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.