பயில்வான் என்ற பூனைக்கு மணி கட்டிய பாடகி சுசித்ரா!

சென்னை: தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட பயில்வான் ரங்கநாதன், 35 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடிகராகவும் செய்தியாளராகவும் உள்ளார். ஆரம்ப காலங்களில் வாய்ப்புகள் இல்லாததால், ஆபாசப் பத்திரிகைகளில் எழுதி வந்ததாக அவரே சக பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளாராம்.

இப்போது திரைத்துறையில் வாய்ப்புகளே இல்லாத சூழலில், திரைத்துறைப் பிரபலங்கள் தொடர்பாக வாய்க்கு வந்தபடி யூடியூப் பக்கங்களில் பேசிவருகிறார். இவர் மீது புகார் கூறியோ, காவல் துறையிடம் மனு கொடுத்தோ பெரிய ஆளாக ஆக்கிவிடக் கூடாது என்ற நோக்கில் பலரும் இவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.

இன்னொரு பக்கம் தான் பேசும் ஆபாச பேச்சுக்கு எப்படியும் சிக்கிக்கொள்வோம் என்று தெரிந்து தனது பெயரில் யூடியூப் பக்கம் வைத்தக்கொள்ளாமல், பணத்தைப் பெற்றுக்கொண்டு தனியார் யூடியூப் பக்கங்களில் பேசிவந்தார் ரங்கநாதன்.

நடிகைகள், தயாரிப்பாளர்கள், முன்னணி நடிகர்கள் என ஒருத்தரை விடாமல் கேவலமாகவும் ஆபாசமாகவும் பேசி வந்தார் பயில்வான். தங்கள் ஊர்க்காரர் என்பதால் பிரபல மாலைப் பத்திரிகையின் சேனல் ஒன்று இவருக்கு தொடர்ந்து பேச வாய்ப்புக் கொடுத்து வந்தது. அந்த தைரியத்தில், எவ்வளவு மோசமான எல்லைக்குச் சென்று பேச முடியுமோ, அந்த அளவுக்குப் பேசி வந்தார். குறிப்பாக ரஜினி மகள் ஐஸ்வர்யா – தனுஷ் திருமண முறிவு விஷயத்தில் இவர் பேச்சு பலருக்கும் அருவருப்பைத் தந்தது.

இவரது பேச்சு இடம்பெற்ற சேனலுக்கு பார்வைகள் அதிகரித்தாலும், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி இவரது பேச்சுகளுக்கு பொதுமக்கள் மத்தியிலேயே பல எதிர்ப்பும் கிளம்பியது. சமூக வலைத்தளங்களிலும் இது எதிரொலித்தது.

இந்நிலையில் தான் பாடகி சுசித்ராவின் தனிப்பட்ட வாழ்க்கை, தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவில் சுசித்ராவின் பங்கு என்றெல்லாம் இவர் சமீபத்தில் பேசிய பேச்சுகள் சமூக வலைத் தளத்தில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து பாடகி சுசித்ரா பயில்வானை செல்போனில் தொடர்புக்கொண்டு தன்னை பற்றிய பேச்சுக்கு ஆதாரம் உள்ளதா? எதை வைத்து இப்படி பேசினீர்கள்? உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை இப்படி பேசுவீர்களா? என்று கேள்வி கேட்டு வெளுத்தெடுத்தார். சுசித்ராவின் எந்தக் கேள்விக்குமே பயில்வானால் பதில் சொல்ல முடியவில்லை. திக்கித் திணறி தடுமாறினார். போலீசில் புகார் செய்வேன் என சுசித்ரா சொன்துமே சர்வநாடியும் அடங்கி அமைதியாகிப்போனார் பயில்வான்.

இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் மீது பாடகி சுசித்ரா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில் கடந்த மார்ச் மாதம் தனியார் யுடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் தன்னைப்பற்றி மிக அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியிருப்பதாகவும், இதே போன்று கடந்த ஐந்து ஆண்டுகளாக பொய்யான செய்திகளை எந்த அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவர் தொடர்ந்து பேசிவருவதாகவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார் பாடகி சுசித்ரா.

தன்னை பற்றி அவதூறாக, ஆபாசமாகப் பேசிய பயில்வான் ரங்கநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் பாடகி சுசித்ரா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பயில்வானுடன் தான் தொலைபேசியில் பேசியதன் பதிவையும் அவர் தனது புகார் மனுவுடன் இணைத்துள்ளார்.

தொடர் புகார்கள் வருவதால் பயில்வான் ரங்கநாதனைப் பிடித்து விசாரிக்க முடிவு செய்துள்ள போலீசார் அவர் பேசிய யூடியூப் சேனல்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வரும் அந்த மாலைப் பத்திரிகையின் சேனலுக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

தன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்ததிலிருந்து, திரையுலக நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் உள்ளார் பயில்வான் என்பது குறிப்பிடத்தக்கது.

Bayilwan RanganathaSuchitraசுசித்ராபயில்வான் ரங்கநாதன்
Comments (0)
Add Comment