ரவிஸ் டாக்டர் பி ரவி பிள்ளை வழங்கும் பரோஸ் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வினில்…
வசனகர்த்தா ஆர் பி பாலா பேசியதாவது…
“மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன். பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்றுதான் இங்கு டிரெய்லர் 3 டியில் பார்த்தேன். இந்தளவு நேர்த்தியாக ஒரு திரைப்படம் இந்திய சினிமாவில் வந்ததில்லை. தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். இந்தப்படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய பாக்கியம். மோகன்லால் சாருடன் பணிபுரிந்த பிறகு தான், எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. எனது வாழ்க்கையைப் புலி முருகனுக்கு முன்னால், பின்னால் என்றே சொல்லலாம். அவரில்லாமல் நான் இல்லை. எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்”.
இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் பேசுகையில், “பரோஸ் என்னுடைய அறிமுகத் திரைப்படம், இது மோகன்லால் சாரின் முதல் படைப்பு. அவர் இயக்கும் முதல் படத்தில் நான் இசையமைப்பாளராக அறிமுகமாவது மகிழ்ச்சி. பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். 2019ல் அமெரிக்காவில் ஒரு போட்டியில் வெற்றிபெற்று வந்த பிறகு, முதல் ஆளாக மோகன்லால் சார் தான் வாழ்த்தினார். பின்னர் இந்தப்படம் பற்றிச் சொல்லி, இசையமைக்க வேண்டும் என்றார். மிகப்பெரிய சந்தோசம். கோவிட் வந்தது, அந்த தடைகளைத் தாண்டி, இப்போது படம் வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நானும் நிறைய இசை கற்றுக்கொண்டுள்ளேன். எனக்கு முழு ஆதரவாக இருந்த மோகன்லால் சாருக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றியுள்ள இசைக் கலைஞர்கள், பாடகர்கள் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக இப்படம் உங்களை ஆச்சரியப்படுத்தும் அனைவருக்கும் நன்றி”.
நடிகர், இயக்குநர் மோகன்லால் பேசியதாவது:
“47 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். இயக்குநராக என் முதல் படம். எப்படி இது நடந்தது? என எல்லோரும் கேட்டார்கள், இது அதுவாகவே நடந்தது,
பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன்லால்.
‘டீப் ப்ளூ சீ 3’, ‘ஐ இன் தி ஸ்கை’ மற்றும் ‘பிட்ச் பெர்பெக்ட்’ ஆகிய படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். இளம் வயதிலேயே உலகப் புகழ்பெற்ற, லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்கு சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.