நடிகர்கள்: பரத், வாணி போஜன்
ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா
இசை: எஸ்என் பிரசாத்
தயாரிப்பு: ஆக்சஸ் பிலிம் பேக்டரி
இயக்கம்: எம் சக்திவேல்
பொதுவாக பேய்ப் படங்கள் என்றால் இருட்டு வீடு அல்லது பங்களாவுக்குள் வைத்து லாஜிக்கே இல்லாமல் மிரட்டுவார்கள். ஆனால் மாறுதலுக்கு வெளியே கூட்டிப் போய் மிரள வைக்க முயற்சித்திருக்கிறார்கள் மிரள் குழுவினர்.
பரத் – வாணி போஜன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். பத்து வயதில் ஒரு மகன். வாணிக்கு அடிக்கடி வினோதமான கனவு வந்து மிரள வைக்கிறது. அவரது மன பயத்தைப் போக்க குலதெய்வம் கோயிலுக்குப் போய் பூசை செய்யச் சொல்கிறார்கள். பூஜை முடிந்து கிளம்ப வேண்டிய சூழல். இரவு நேரத்தில் காரில் கிளம்பும் பரத் குடும்பத்தை திடீரென்று ஒரு பொட்டல் வெளியில் மர்ம கும்பல் வழிமறித்துத் தாக்குகிறது. வாணியும் அவரது மகனும் அங்கிருந்து காணாமல் போக, அவர்களைத் தேடுகிறார் பரத். அதன் பிறகு என்ன ஆனது என்பது மீதிக் கதை.
சிக்கலற்ற கதை. பார்ப்பவர்களை சற்றே மிரள வைக்கும் திரைக்கதை. எதிர்ப்பாராத திருப்பங்கள் நிறைந்த உச்சக் காட்சி என ஒரு வித்தியாசமான முயற்சிதான்.
பதட்டமும் பரிதவிப்புமாக நன்றாகவே நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார் பரத். ஆனால் சில காட்சிகளில் அவரும் குழம்புகிறார், நமக்கும் அது தொற்றிக் கொள்கிறது.
வாணியும் கொடுத்த வேலையை நிறைவாகவே செய்திருக்கிறார்.
கேஎஸ் ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், சிறுவன் அங்கித் என அனைவருமே தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்,
பிரசாத்தின் இசை, சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு இரண்டுமே படத்தின் தலைப்பிற்கேற்ப உள்ளன.
திரைக்கதையை வித்தியாசமாக யோசித்த இயக்குநர், காட்சி அமைப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் மிரள வைத்திருக்கும்.