லால் சிங் சத்தா பட விமர்சனம்

டிகர்கள்: ஆமிர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா

ஒளிப்பதிவு: சத்யஜித் பாண்டே (சேது)

இசை: தனுஜ் டிக்கு, பிரிதம்

தயாரிப்பு: ஆமிர்கான் புரொடக்ஷன்ஸ், வயாகாம் 18

இயக்கம்” அத்வைத் சந்தன்

மூலம்: ஃபாரஸ்ட் கம்ப்

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் பிறந்தவன் லால் சிங் சத்தா. அவன் குடும்பமே நாட்டின் ராணுவத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்கள். தன்னைச் சுற்றி நடப்பவைகளை அவனால் தாமதமாகவே புரிந்துகொள்ள முடியும். இந்தப் பிரச்சினை காரணமாக, அவனை மனநலம் குன்றியவனாகவே அனைவரும் நடத்துகின்றனர். கேவலப்படுத்துகின்றனர். சக மாணவர்கள் எள்ளி நகையாடுகின்றனர், உடல் ரீதியாக துன்புறுத்தவும் செய்கின்றனர்.

ஆனால், அவனது அம்மா அவனுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முயல்கிறார். பள்ளித் தோழி ரூபா டிசோசா அளிக்கும் அன்பும், ஊக்கமும் அவனை, தடைகளைக் கடந்து சாதிக்க வைக்கின்றன. ரூபாவின் துணை இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்புகிறான். தன் விருப்பத்தை ரூபாவிடம் சொல்கிறான். ஆனால் மும்பை சென்று மாடலாக, நடிகையாக விரும்புவதாகக் கூறி அவனிடமிருந்து விலகிச் செல்கிறாள் ரூபா.

அம்மாவின் ஆசைப்படி ராணுவத்தில் சேர்ந்து, வீரசக்ரா பதக்கம் வென்று, நண்பன் பாலுவின் கடைசி ஆசைப்படி உள்ளாடை உற்பத்தி தொழிலிலும் வெற்றிக்கொடி நாட்டும் லால், ரூபாவை தேடிச் செல்கிறான். அவளை தன் வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொள்ளும் லாலின் விருப்பம் நிறைவேறியதா? ரூபாவுக்கு என்ன ஆனது? லால் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தகட்ட திருப்பங்கள் என்ன? இக்கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது ‘லால் சிங் சத்தா’ படம்.

ஒரு ரயில் பயணத்தில் சக பயணிகளிடம் தன் சொந்தக் கதையை தானாகவே முன்வந்து ஆமிர்கான் சொல்வதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைப் பருவம் தொடங்கி், வாழ்வின் முக்கியமான மத்திய பருவம் வரையிலான ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணம்தான் லால் சிங் சத்தா. ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் மூலக் கதையை சிதைக்காமல், இந்திய நிலப்பரப்பு, சூழலுக்கேற்ப சில மாற்றங்களைச் செய்து எடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஓடும் படம் பல இடங்களில் ரசிக்கும்படி இருந்தாலும், சில இடங்கள் பொறுமையைச் சோதிக்கவும் செய்கின்றன. ஆனால் நெகிழ வைக்கும் காட்சிகள், சேதுவின் அற்புதமான ஒளிப்பதிவு, மனதை வருடும் இசை… இவை அனைத்தும் படத்துடன் நம்மை ஒன்ற வைத்து, சமயத்தில் கண்கலங்கவும் வைக்கின்றன.

நெருக்கடி நிலை, அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடந்த ராணுவ நடவடிக்கை, இந்திரா காந்தி படுகொலை, ரதயாத்திரை, மண்டல் கமிஷனுக்கு எதிரான போராட்டம், பாபர் மசூதி இடிப்பு, அதற்கு பிறகான கலவரங்கள், கார்கில் போர்… என சுதந்திர இந்திய வரலாற்றின் முக்கிய அரசியல் நிகழ்வுகளின் நடுவே லால் சிங்கின் கதை பயணிப்பது, படத்தின் இந்தியத் தன்மையை அதிகரிக்கின்றன,

இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் 100 இடங்களில் படமாக்கியிருக்கிறார்கள். மொத்த இந்தியாவையும் அப்படியே சுற்றி வந்த உணர்வு.

கார்கில் போரை மிக விரிவாக காட்சிப்படுத்தும் இடைவேளைக் காட்சி, அதில் ஆமிர் மற்றும் நாகசைதன்யாவின் நடிப்பு குறிப்பிடத்தக்கது.

ஆமிர்கான் தோற்றத்துக்கு மெனக்கெட்ட அளவுக்கு, கரீனா கபூருக்கு சிரத்தை எடுக்கவில்லை. அதேபோல, ரூபா டிசூசா என்ற அந்தப் பாத்திரத்தை அத்தனை அவசரமாகக் கொல்ல வேண்டிய அவசியமென்ன என்ற கேள்வியும் எழுகிறது. படம் முடியணுமில்ல!

ஷாரூக்கானின் சிறப்புத் தோற்றம் ஒரு இனிய ஆச்சர்யம். லால் சிங்கால் கார்கில் போர் முனையில் காப்பாற்றப்படும் எதிரியான மனோ விஜ், பின்னர் மனம் திருந்தி ஆமிர்கானின் உழைக்கும் கூட்டாளியாவது நெகிழ்ச்சி.

திரைக்கதையில் இன்னும் சற்று இறுக்கம் காட்டியிருக்கலாம். ஆனால் மனித வாழ்க்கை எப்போதும் இறுக்கமாக, கச்சிதமாகவேவா பயணிக்கிறது…?

ஏகப்பட்ட அப்பாவித்தனமும் அதே அளவுக்கு அன்பும் கொண்ட ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை உடனிருந்து பார்த்த அனுபவத்தைத் தருகிறது லால் சிங் சத்தா!

Rating: 4.0/5.00

Aamir KhanForest GumpLal Singh Chaddha Movie reviewஃபாரஸ்ட் கம்ப்ஆமிர்கான்லால் சிங் சத்தா விமர்சனம்
Comments (0)
Add Comment