நகைச்சுவையும், திகிலும் கலந்த ‘காட்டேரி’!

மிழ் திரை உலகில் பேயை வைத்து ‘யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது இயக்குநர் டீகேவின் பேச்சு. அவர் பேசுகையில், “இந்தப் படத்தின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு திரையுலக பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்களுக்கு விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற மேலும் ஒரு திரையுலக பிரபலத்திற்கு திருமணமாகி, குழந்தை பிறந்து, அந்த குழந்தை கல்வி கற்க பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டது. அந்த குழந்தை, ‘மாமா.! காட்டேரி எப்போது வெளியாகும்?’ என என்னிடம் கேட்கிறது.

படத்தை தொடங்கும் முன் தயாரிப்பாளர் நான் கேட்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆனால் அவர் ஒரு பட்ஜெட்டையும் நிர்ணயித்தார். படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் அனைவரும் எனக்குப் புதிது. நடிகை ஆத்மிகா, நடிகர் வைபவ். ஆனால் நடிகர், நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் என்னுடைய எதிர்பார்ப்பிற்கு மேலாக தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.

நான் பலமுறை தயாரிப்பாளர் நான் ஞானவேல் ராஜாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சூழலை பக்குவமாக எடுத்துக் கூறி, என்னை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியுடன் காத்திருக்க வைத்தார்,” என்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில் படம் மிகவும் தாமதமானதைக் குறிப்பிடும் வகையில், ”சின்ன வயதில் நடித்த படம் இது,” என்றார்.

இயக்குநருக்கு பதிலளிக்கும் வகையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், ”காட்டேரி படத்துடன் நான்காண்டு கால அனுபவம் எனக்கிருக்கிறது. என்னுடைய மனைவிக்கு பிறகு நீண்ட செய்தியை அனுப்புவது இயக்குநர் டீகே தான். அதில் ‘உங்களுக்கு நல்ல நேரமே என்னுடைய படத்தின் மூலமாகத்தான் கிடைக்கும்’ என்பது கூட இருக்கும். ஆனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நல்ல நேரம் தொடங்கிய பிறகுதான் இந்த ‘காட்டேரி’ வெளியாகிறது.

‘காட்டேரி’ படத்தில் பணியாற்றிய இயக்குநர் டீகேவுக்கு பிறகு பொறுமையுடன் காத்திருந்த நடிகர் நடிகைகளுக்கு இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் வெளியாகும் ‘காட்டேரி’ படத்தில் நடிகர்கள் வைபவ், கருணாகரன், நடிகைகள் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், மனாலீ, பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

DeekayKatteriகாட்டேரிடீகேவரலட்சுமி
Comments (0)
Add Comment