கடைசி காதல் கதை பட விமர்சனம்

 

நடிகர்கள்: ஆகாஷ் பிரேம்குமார், ஈனாக்சி கங்குலி, புகழ், சாம்ஸ், மைம் கோபி
ஒளிப்பதிவு: சிவசுந்தர்
இசை: சேத்தன் கிருஷ்ணா
தயாரிப்பு: ஈ மோகன்
இயக்கம்: ஆர்கே வித்யாதரன்

காதலில் தோல்வி அடையும் ஒரு இளைஞன் மனம் பேதலித்துப் போக, மருத்துவமனையில் சிகிச்சைத் தருகிறார்கள். மருத்துவமனையிலிருந்து வெளியில் வரும் அவர், காதல் தோல்வி துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்ன? என யோசிக்கிறார். அதற்கு ஒரு பதிலையும் அவர் கண்டுபிடித்து அதனைச் செயல்படுத்த முனைகிறார்.

அவரது அந்தப் புதிய யோசனை என்ன… அதில் அவர் வெற்றியடைந்தாரா என்பதை இந்த கடைசி காதல் கதையில், சற்றே நாடகத்தனமாக, அதே நேரம் வாய்விட்டுச் சிரிக்கும்படி சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர் வித்யாதரன்.

நாயகன் ஆகாஷ் பிரேம்குமாருக்கு தனி நாயகனாக இது முதல்படம். காதல், சோகம், கோபம், மனம் பேதலித்த பித்து நிலை போன்ற உணர்ச்சிகளை நன்றாகவே காட்டி நடித்திருக்கிறார். ஆனால் அருகாமைக் காட்சிகளில் அவரிடம் ஒரு பதட்டம் தெரிகிறது.

காதலில் தோற்றப் பிறகு ‘குடியத்துக்குப் போகலாம்’ என பிரச்சாரம் செய்யும்போதுதான் நிறைய வசனங்கள் ரிப்பீட்டு. அதைத் தவிர்த்திருக்கலாம். தனது புதிய யோசனையை அந்த மொட்டை மாடி வெயிலில் நண்பர்களை வைத்து செயல்படுத்தும் காட்சிகளில் அரங்கில் சிரிப்பலை.

தொடாமலே ஒரு புதிய வகைக் காதல் என்று சொல்லிப் பழக ஆரம்பித்து, ஒருகட்டத்தில் கட்டுப்படுத்த முடியாமல் தொட்டுவிடும் நாயகனைப் பிரிந்து, பித்துப் பிடிக்க வைக்கும் நாயகியாக ஈனாக்சி கங்குலி. நடிப்பில் குறை வைக்கவில்லை.

நாயகனின் நண்பர்களாக வரும் குக்வித் கோமாளி புகழ், விஜே ஆஷிக், நோபல் சற்று செயற்கைத்தனம் இருந்தாலும், கலகலப்புக்கு உத்தரவாதம் தருகிறார்கள்.

 

 

சாம்ஸ், மைம் கோபி ஆகியோர் வரும் காட்சிகளும் கிச்சுகிச்சு மூட்டும் ரகம்தான். பிரியங்கா வெங்கடேஷ், அனு, பிரியதர்ஷினி, நிஷார், ஸ்வப்னா, கிருத்திகா போன்றோர் புதியவர்களாக இருந்தாலும் உறுத்தாத நடிப்பைத் தந்துள்ளனர்.

படத்தின் பட்ஜெட்டை மனதில் வைத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சிவசுந்தர். அதிலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு வேலை காட்டியிருக்கிறார். படத் தொகுப்பில் இன்னும் கூட கவனம் செலுத்தியிருக்கலாம்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்கே வித்யாதரன். வயதுவந்தோருக்கான நகைச்சுவை என்பதால் இரட்டை அர்த்தம் அல்ல… நேரடியாக அர்த்தத்திலேயே பல வசனங்கள். ஆனால் சிரிப்புக்கு பஞ்சமில்லை.

காதல் தோல்வி, துன்பங்களுக்குக் காரணம் இதுதான் என ஒரு கருத்தைச் சொல்லி 2 மணி நேரத்துக்குமேல் ஓடவிட்டு, கடைசி சில நிமிடங்களில், மனிதன் தன் ஈகோவைத் தொலைத்தால் காதல் மட்டுமல்ல, வேறு எதிலுமே தோல்வியில்லை என்று தானே திரையில் வந்து சொல்லி முடிக்கிறார் வித்யாதரன். யோசிக்க வேண்டிய கருத்துதான்!

மற்றபடி படத்தின் சில காட்சிகளில் நாடகத்தனம் எட்டிப் பார்த்தாலும், ரசித்து சிரிக்கும்படியாகவே உள்ளது கடைசி காதல் கதை.

மதிப்பீடு: 3.0/5.0

Kadaisi Kadhal Kadhai movie reviewகடைசி காதல் கதை விமர்சனம்
Comments (0)
Add Comment