பிணத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சினிமா யூட்யூபர்கள்! – ‘தெற்கத்தி வீரனில்’ சாட்டை சுழற்றிய கே ராஜன்

ந்திரபாபு பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில் புதுமுகம் சாரத், நடிகராகவும், இயக்குநராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் திரையுலகில் கால் பதிக்கும் திரைப்படம் ‘தெற்கத்தி வீரன்’. முழுமையான பொழுதுபோக்கு, ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அசோக் பேசுகையில், “தெற்கத்தி வீரன் போஸ்டர் வெளியான போதே இரு சகோதரர்களின் யுத்தம் என்று போடப்பட்டிருந்தது. இந்தப்படம் எனக்கு குடும்ப விழா போல் தான். இந்தப்படம் எனக்கு புதிய வாழ்க்கையை எனக்கு ஆரம்பித்து வைத்துள்ளது. இப்படத்தை பற்றி முதலில் சொன்ன போது, ஹீரோவே எல்லாவற்றையும் செய்கிறார் என்ற போது டி ஆர் ஞாபகம் தான் வந்தது. என்னை நடிக்க கேட்ட போது நான் நாயகனாக சிறிய படங்களில் நடிக்கிறேன் சரியாக வருமா என கேட்டேன். கதை கேளுங்கள் என்றனர். கதை சகோதரத்துவ போரை சொல்வதாக இருந்தது. அது எனக்கு பிடித்தது படத்தில் சாரத் எனும் நபர் அண்ணணாகிவிட்டார். இந்தப்படத்தின் தூண் இவர் தான். இந்தப்படத்தின் டிரெய்லர் பார்க்க எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்றார்.

தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே ராஜன் பேசுகையில், “பிணத்தை வைத்து யூட்யூபர்கள் பிழைக்கிறார்கள். தமிழ் திரையில் சிறந்து விளங்கிய நடிகை மீனா கணவர் இறப்பில் பணம் சம்பாதிக்கிறார்கள் அதை பார்க்க மனது கஷ்டமாக இருக்கிறது. இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இதைச் செய்துவரும் யாராக இருந்தாலும் தொலைத்துவிடுவேன். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப்படத்திற்கு தமிழில் படத்திற்கு தலைப்பு வைத்திருப்பது மிகச்சிறப்பான விஷயம். இந்த திரைப்படம் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. எடிட்டர் உடைய பணி பாராட்டும்படி உள்ளது. இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா நம்ம பிள்ளை. நான்தான் என் டபுள்ஸ் படத்தில் அறிமுகம் செய்தேன். அவரது இசை இந்தப் படத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு என அனைத்தையும் சாரத் செய்துள்ளார். அவருடைய திறமையை நான் பாராட்டுகிறேன்,” என்றார்.

இயக்குநர் நடிகர் கே பாக்யராஜ் பேசுகையில், “ஶ்ரீகாந்த் தேவா எப்பொழுதும் குத்துபாட்டு போட்டுகொண்டிருந்தார், இந்த படத்தில் மெலடி பாட்டு போட்டிருப்பது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. அவர் இதை தொடர வேண்டும். விருது வென்ற நிறைய தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் இருக்கின்றனர், அது எனக்கும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. இயக்குநர் யாரிடமும் வேலை பார்க்காமல், நேரடியாக இயக்குநராக மாறியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது, அவரது பாடல் வரிகளும் சிறப்பாக இருக்கிறது. இந்த கதை உண்மை சம்பவம் என்று கூறினார்கள், அதற்கு வாழ்த்துகள்,” என்றார்.

இறுதியாக படத்தின் இயக்குநரும் நாயகனுமான சாரத் பேசியதாவது:

“ஒரு உண்மை சம்பவத்தை தழுவியது தான் இந்த படம். அதை கமர்சியல் சினிமாவாக உங்களுக்கு தர விரும்பினேன். ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட வேண்டும் என்பது எனது 17 வருட கனவு. படத்தின் பின்னணி இசைக்கு மட்டும் 60 நாட்கள் எடுத்துகொண்டோம். படத்தின் எபெக்ட்ஸ் பணிகளில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த திரைப்படம் எடுத்து வெளியே கொண்டு வர நிறைய கஷ்டப்பட்டிருக்கிறோம். ஒரு தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் உடைய வலி என்ன என்பதை இந்த படம் மூலமாக தெரிந்து கொண்டேன். படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நான் நன்றி கூறி கொள்ள விரும்புகிறேன். நடிகர்கள் முழு அர்பணிப்பை கொடுத்துள்ளனர்.”

மேலும் நடிகர் மதுசூதன் ராவ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் பரணி, ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

 

k rajanTherkathi Veeranகே ராஜன்தெற்கத்தி வீரன்
Comments (0)
Add Comment