முதல் வாரம்… எவ்வளவுதான் வசூலித்தது ரஜினியின் ஜெயிலர்?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வசூல் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவுக்கு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

படம் வெளியான முதல் நாளான ஆகஸ்ட் 10-ம் தேதி இந்தப் படம் ரூ 39 கோடிவரை தமிழகத்தில் வசூலித்ததாகவும், உலகெங்கும் ரூ 115 கோடியை வசூலித்ததாகவும் தகவல் வெளியானது. அதேநேரம், இந்த புள்ளிவிவரத்தில் வித்தியாசம் இருப்பதாகவும், 98 கோடிதான் வசூலானதாகவும் சிலர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் படம் வெளியான 7 நாட்களில் உலகெங்கும் ரூ 520 கோடியை ஜெயிலர் வசூலித்தாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ 165 கோடியைக் குவித்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரம் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனம், படத்தின் 7 நாள் வசூல் ரூ 375.40 கோடி என அறிவித்தது. அத்துடன், இந்தத் தொகை தோராயமானதுதான் என்றும், இன்னும் சிலஸ நாடுகளில் வசூல் விவரம் முழுமையாக வந்து சேராததால், விரைவில் உண்மையான தொகை எவ்வளவு எனத் தெரிவிப்பதாகவும் அறிவித்துள்ளது.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியான நாளிலிருந்து, திரையிடப்பட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் படம் குறித்து நேர்மறையான தகவல்கள், அபரிமிதமான வசூல் விவரங்கள் வந்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட 4000 அரங்குகளுக்கு மேல் இந்தப் படம் வெளியானது. பெரும்பாலும் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே இந்தப் படம் ஓடிக் கொண்டிருப்பதால், முதல் வாரத்தில் மட்டும் 500 கோடிக்கு மேல்தான் வசூல் இருக்கும் என்றும், சன் பிக்சர்ஸ் விரைவில் அதை அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

Box OfficeJailerrajinikanthஜெயிலர்பாக்ஸ் ஆபீஸ்ரஜினிகாந்த்
Comments (0)
Add Comment