தீபாவளி… பின்வாங்கிவிட்டதா ரஜினியின் அண்ணாத்த?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி போட்டியில் இருந்து பின்வாங்கி விட்டதாகவும், ஒரு மாதம் கழித்து, அதாவது பொங்கல் நெருக்கத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு வாரமாக தகவல் பரவி வந்தது.

ஏற்கனவே அண்ணாத்த தீபாவளிக்கு வரும் என்பதை பட நிறுவனம் 2 தடவை உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால் ரிலீசுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழுவினர் தொடங்கவில்லை என்றும் சில மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கொரோனாவால் தியேட்டர்களை திறக்காத நிலையில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியானால் வசூலில் பாதிப்பை உண்டாக்கும் என்றும் எனவே அண்ணாத்தை ரிலீசை பொங்கல் பண்டிகைக்கு தள்ளிவைக்க படக்குழுவினர் ஆலோசிக்கின்றனர் என்றும் தகவல்கள் பரவின.

மேலும் படத்தின் டிஐ பணிகள் இன்னும் முடியவில்லை என ஒரு தரப்பில் தகவல் கசிந்தது. பொங்கலுக்கு கொரோனா குறைந்து தமிழக தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று படக்குழுவினர் தரப்பில் எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன் மூலம் அண்ணாத்த ரிலீசில் நிலவிய குழப்பம் தீர்ந்துள்ளது.

தீபாவளிக்கு கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது அண்ணாத்த.

AnnaattheDiwali Releaserajinikanthஅண்ணாத்ததீபாவளிரஜினிகாந்த்
Comments (0)
Add Comment