அந்தாதுன் தமிழ் ரீமேக்… பிரசாந்தை இயக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்! – தியாகராஜன் அறிவிப்பு

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஜெஜெ பெட்ரிக் இயக்குவார் என நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் அறிவித்துள்ளார்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில், தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்கிறார். இப்படத்தை மோகன் ராஜா இயக்குவார் என முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் இருந்து மோகன் ராஜா விலகிவிட்டார். மோகன் ராஜாவுக்கு பதிலாக ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கவுள்ளதாகத் கூறப்படுகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை அவர் இயக்கிய விதம் தியாகராஜனுக்கு மிகவும் பிடித்திருந்ததால் இப்படத்தையும் அவரை இயக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டாராம்.

இன்று தனது முக நூல் பக்கத்தில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தியாகராஜன். படத்தின் இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

Andhadun Tamil remakePrashantThiagarajanஅந்தாதுன் தமிழ் ரீமேக்தியாகராஜன்பிரசாந்த்பொன்மகள் வந்தாள் பெட்ரிக்
Comments (0)
Add Comment