இந்திய எல்லையில் 60000 ராணுவத்தினரைக் குவித்துள்ளது சீனா! – மைக் பாம்பியோ

வாஷிங்டன்: இந்தியாவின் வடக்கு எல்லைப்பகுதியில் 60,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவின் ‘மோசமான நடத்தை’ குவாட் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்திய – பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய குவாட் என்ற குழுவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு பிறகு இந்த நாடுகள் நேரடியாக சந்தித்துக்கொள்வது இதுவே முதல் முறை.

இந்திய – பசிபிக் பிராந்தியத்திலும், தென் சீன கடல் மற்றும் இந்தியாவுடனான லடாக் எல்லைப்பகுதி உள்ளிட்டவற்றில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பிய பாம்பேயோ தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், “தங்களது வடக்கு எல்லைப்பகுதியில் 60,000 சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதை இந்திய தரப்பு அறிந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

“பெரிய ஜனநாயக நாடுகளாகவும், சக்திவாய்ந்த பொருளாதாரத்தை கொண்டதாகவும் உள்ள இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளை கொண்ட குவாட் என்றழைக்கப்படும் குழுவை சேர்ந்த நாடுகளின் சக வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்தேன். இந்த நாடுகள் அனைத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து அச்சுறுத்தல்கள் நிறைந்த உண்மையான ஆபத்தை எதிர்கொண்டுள்ளன,” என்று அவர் ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

“இந்த போராட்டத்தில் அமெரிக்கா அவர்களின் கூட்டாளியாகவும் பங்காளியாகவும் இருக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

“அனைத்து நாடுகளும் இந்த அச்சுறுத்தலை உணர்ந்துள்ளன. குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்துடன் நேரடியான மோதலை மேற்கொண்ட சீனர்கள், இப்போது வடக்கில் இந்தியாவுக்கு எதிராக பெரும் படைகளைத் திரட்டத் தொடங்கியுள்ளனர்,” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து, லடாக்கின் கிழக்குப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருவது, இருதரப்பு உறவுகளை கணிசமாக சிதைத்துள்ளது.

India - China BorderLadakMike PompeoUSஅமெரிக்காஇந்திய - சீன எல்லைசீன ராணுவம்மைக் பாம்பியோலடாக்
Comments (0)
Add Comment