சின்ன படம், பெரிய படம், இவர் படம், அவர் படம் என்ற பாரபட்சம் இல்லாமல், தன் மனத்துக்குப் பட்டதை, தனக்கே உரிய பாணியில் விமர்சனமாக வைப்பவர் ப்ளூ சட்டை மாறன் எனும் இளமாறன்.
‘எங்கள் படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? முடிஞ்சா நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்’ என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது மாறனுக்கு சவால் விட்டு வந்தனர்.
‘அவ்ளோதானே… எடுத்துட்டா போச்சு’ என களத்தில் இறங்கிய மாறன் ஒரு படத்தை எடுத்து முடித்தே விட்டார்.
படத்தின் பெயரிலேயே ஒரு அதிரடியை வைத்தார். ‘ஆன்டி இண்டியன்’ .. இதுதான் படத்தின் தலைப்பு. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார் மாறன்.
இத்திரைப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சார் குழுவினர் பார்த்தனர்.
ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளனர்.
அடிப்படையிலேயே சர்ச்சையான கதைக்களம் கொண்ட படம் என்பதால் நிராகரிப்பதாக காரணம் கூறியுள்ளனர்.
மதத்தை வைத்து நடத்தப்படும் கேவல அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை செம நக்கல், நையாண்டி செய்துள்ளாராம் மாறன்.
இப்படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் வேளையில், சென்சார் குழுவினர் இதற்குத்தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தடை குறித்து தயாரிப்பாளர் ‘மூன் பிக்சர்ஸ்’ ஆதம் பாவா கூறுகையில், “சென்சார் குழுவினர் அவர்களின் முடிவை சொல்லியுள்ளனர். நாங்கள் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்யவுள்ளோம். விரைவில் இத்தடை நீங்கி ‘ஆன்டி இண்டியன்’ படம் திரைக்கு வரும்,” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.