திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளில் திறக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

இன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார். இன்றைய தினம், மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்பதால் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து 5 நாட்கள் (அதாவது ஜூலை 21-ந் தேதி வரை) ஆடி மாத சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களில் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடத்தப்படும். வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *