28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சுதந்திரப் போர் என்ற முழக்கத்தோடு திரையில் களம் இறங்கி இருக்கிறார் இந்தியன் தாத்தா.

முதல் பாகத்தில் ஹாங்காங் தப்பிச் சென்ற இந்தியன், மீண்டும் வரமாட்டாரா… நாட்டில் தலை விரித்தாடும் லஞ்சம், ஒழுங்கின்மையை களையெடுக்க மாட்டாரா என ஏங்கும் ஒரு இளைஞர் கூட்டம், சமூக ஊடகம் மூலம் அவருக்கு விடும் அழைப்பு உலகெங்கும் வைரலாகிறது. தைவான் தலைநகர் தைபேயில் வர்மக் கலை கற்றுத் தரும் பயிற்சி மையம் வைத்திருக்கும் இந்தியன் தாத்தாவுக்கும் அந்த அழைப்பு எட்டுகிறது. எப்போதும் அப்டேட்டாகவே இருக்கும் தாத்தாவும் இந்தியாவுக்கு கிளம்புகிறார்.

வந்து அவர் என்னவெல்லாம் செய்கிறார், ஊழல் ஒழிந்துவிட்டதா, தாத்தா கடைசியில் என்னவானார் என்பதுதான் மீதி இரண்டரை மணி நேரப் படம்.

கமல் ஹாசன் நான்கைந்து கெட்டப்புகளில் வருகிறார்
திகட்டத் திகட்ட வர்மக் கலை சண்டை செய்கிறார். நடிப்பில் இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என்று கேட்கும் வகையில் அசத்துகிறார்.

சமுத்திரக்கனி, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரின் நடிப்பும் படத்துக்கு பலம் சேர்க்கும் அளவு உள்ளது. விவேக்கைப் பார்க்கும்போதே மனம் கனக்கிறது.

ரவிவர்மனின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.

அனிருத்தின் இசை எதிர்பார்த்ததை விட நன்றாகவே உள்ளது.

அரங்க அமைப்புக்கும், பிரமாண்டத்துக்கும் கொடுத்த முக்கியதுவத்தில் பாதியை திரைக்கதைக்கும் கொடுத்திருக்கலாம். குறிப்பாக கமல் ஹாசன் பாத்திரம் உணர்வுப்பூர்வமாக யாருடனும் ஒன்றவில்லை, படத்திலும் சரி, பார்வையாளர் மத்தியிலும் சரி!

முதல் பாகத்தில் சேனாபதி இந்தியனாக மாறக் காரணங்கள் மிக வலுவாக, அழுதமாகக் காட்டப்பட்டிருக்கும். இதில் அது சுத்தமாக இல்லை. அதுதான் படத்தின் பெரும் பிரச்சினை. இன்னொன்று, நீள நீளமான துரத்தல் காட்சிகள்.

இவற்றைத் தாண்டி நம்மைப் பார்க்க வைப்பது படம் சொல்ல வரும் உண்மையான ‘ தூய்மை இந்தியா ‘ எனும் நோக்கம்!

Rating: 2.5/5.0

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *