சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்துடன் விஜயகாந்த் வீட்டில்… காரணம் என்ன?

2

சென்னை: சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் வீட்டில் முடங்கிய நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த வாரம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார்.

திரையுலகில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது விஜயகாந்த் மறைவு. விஜயகாந்த் உடலுக்கு சூர்யா, கார்த்தி, சிவகுமார் மூவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. சூர்யா மட்டும் வெளிநாட்டிலிருந்தபடி வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்திருந்தார். அதுவும் காரில் பயணித்தபடி அந்த வீடியோலவில் பேசியிருந்தார். நடிகர் கார்த்தி காரைக்குடியில் இருந்து கொண்டே, விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வராமல் தவிர்த்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்தில் சூர்யா தனியாகவும், கார்த்தி, சிவகுமார் ஒன்றாகவும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

சூர்யாவுக்கு பெரிதாக சந்தை மதிப்பு ஏற்படாத நிலையில் எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் பெரியண்ணா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொடுத்திருந்தார் விஜயகாந்த். அந்தப் படத்துக்குப் பிறகுதான் சூர்யா பெரிதாக பேசப்பட்டார். அந்த நன்றிக் கடன் கூட சிவகுமார் குடும்பத்துக்கு இல்லாமல் போய்விட்டதே என பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதேபோல அன்று விஜயகாந்தால் கட்டி எழுப்பப்பட்ட நடிகர் சங்கத்தில்தான் இப்போது பொறுப்பில் உள்ளார் கார்த்தி, நியாயமாக அவர்தான் முதலில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும்.

இப்படி விமர்சனங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்தான், நேற்று முன்தினம் கார்த்தியும் சிவகுமாரும் விஜயகாந்த் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து நேற்று சூர்யாவும் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்தை நினைத்து தேம்பி தேம்பி அழுத சூர்யா, அவருடன் பெரியண்ணா படத்தில் நடித்தது குறித்தும் நெகிழ்ச்சியாக பேசினார்.

“அண்ணனைப் போல யாரும் கிடையாது, இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாமல் போனது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தான். எப்போதும் அவரின் நினைவு இருக்கும், நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு எனக்கு சம்மதமே. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உள்ளது,” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், சூர்யா, கார்த்தி, சிவகுமார் மூவரும் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளனர். கேப்டன் நினைவிடத்தில் கார்த்தி, சிவகுமார் ஒன்றாகவும், சூர்யா தனியாகவும் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதனால் மூவருமாக சேர்ந்து விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று, அங்க வைக்கப்பட்டிருந்த கேப்டனின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன்கள் ஆகியோருக்கு ஆறுதல் கூறினர். விஜயகாந்த் வீட்டுக்கு சூர்யா, கார்த்தி, சிவகுமார் மூவரும் சென்று அஞ்சலி செலுத்திய புகைப்படம் தீப்பரவலாகி வருகிறது.