நடிகர்கள்: லிங்கா, சாம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா மற்றும் பலர்

இசை: நவ்நீத் சுந்தர்

தயாரிப்பு: ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மெண்ட்

இயக்கம்: பாலாஜி வேணுகோபால்

ஷார்ட்பிளிக்ஸ் (ShortFlix) ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் இணையத் தொடர் ‘பானி பூரி’ (Paani Poori). 8 பாகங்களைக் கொண்ட இந்தத் தொடர் எப்படி இருக்கிறது?

படத்தின் தலைப்பு முதலில் பார்க்க ‘என்னடா இப்படி ஒரு தலைப்பு?’ என்று தோன்றக்கூடும். ஆனால் இந்தத் தொடரைப் பார்த்தால் அது எத்தனை அழகான இளமையான தலைப்பு என்பது புரிந்துவிடும்.

நாயகன் லிங்காவின் திரைப்பெயர் தண்டபாணி. அதனால் அவர் பாணி. நாயகி சாம்பிகாவின் பெயர் பூர்ணிமா… அதனால் அவர் பூரி. பாணி பூரி… எப்படி!

பாணிக்கும் பூரிக்கும் காதல். சம்பிகாவின் தோழி ஒருத்திக்கு திருமணமாகி, மணமுறிவும் நேர்ந்துவிடுகிறது. இப்படி ஒரு பிரச்சினை தங்களுக்கும் வந்துவிடக் கூடாதே என்றெண்ணும் சம்பிகா, திருமணத்துக்கு முன்பே காதல் முறிவை ஏற்படுத்திக்கொள்ள முடிவெடுக்கிறார். சம்பிகாவின் பெற்றோரும் விவாகரத்து பெற்றவர்களே. ஆனாலும் நல்லமனம் கொண்டவர்கள். சம்பிகாவின் காதல்முறிவு முடிவு, அப்பா குமரவேலுக்குத் தெரிய அவர் ஒரு யோசனை சொல்கிறார். திருமணம் செய்துகொள்ளாமல், கணவன் – மனைவி போல் வாழும், லிவிங் டூ கெதர் முறையில் இருவரும் 7 நாட்கள் வாழ வேண்டும், இந்த 7 நாட்களில் லிங்காவின் காதல் உண்மையாக இருந்தால் அவரை திருமணம் செய்துக்கொள்ளலாம், இல்லை என்றால் காதலை முறித்துக் கொள்ளலாம் என்பதே அந்த யோசனை. கிட்டத்தட்ட லவ்டுடே படத்தில் சத்யராஜ் சொல்லும் யோசனை மாதிரிதான்.
அதன்படி, லிங்காவுடன் சேர்ந்து 7 நாட்கள் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்வதற்கு, சில நிபந்தனைகளுடன் சம்மதிக்கும் ஜம்பிகா, 7 நாட்களுக்குப் பிறகு லிங்காவை விட்டு பிரிந்தாரா? அல்லது அவரை மணந்தாரா? என்பது தான் ‘பாணி பூரி’ தொடரின் கதை.

பெற்றோர் அனுமதியுடன் லிவிங் டு கெதர் என்பதே திரைக்கு சற்றுப் புதிதுதான். அதிலும் ஒரு இணையத் தொடரில் இந்தக் கருத்தை ஆபாசமோ அருவருப்போ இல்லாமல் சொல்லியிருப்பதற்காகவே இயக்குநர் பாலாஜி வேணுகோபாலைப் பாராட்டலாம்.

லிங்காவின் நடிப்பு மகா இயல்பு. சம்பிகா தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் கவர்கிறார். தந்தை பாத்திரத்தில் வரும் இளங்கோ குமரவேல் பெரும் பலம்.

நாயகனின் நண்பனாக வரும் வினோத் சாகர் இன்னொரு குறிப்பிடத்தக்க திறமையாளர்.

பிரவீண் பாலுவின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான காட்சியமைப்பை சிறப்பாகக் காட்டியுள்ளது. நவ்னீத் சுந்தரின் இசையமைப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

8 பாகங்கள் கொண்ட இந்தத் தொடர் கலகலப்பாகச் சென்றாலும், முழுக்க முழுக்க பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அதுவே சிலநேரம் சலிப்புத் தட்டுகிறது. இது இணையத் தொடரா, சின்னத் திரைத் தொடரா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

ஆனாலும் பொறுமையாக அமர்ந்து பார்க்க வைத்துவிடுகிறது பாணிபூரி.

– எஸ்எஸ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *