பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் மரணம்

2

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி மாரடைப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.

ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.

1984-முதல் சிறு சிறுவேடங்கள் மற்றும் நகைச்சுவை, குண்ச்சித்திர கதாப்பாத்திரங்களில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் மயில்சாமி நடித்துள்ளார். 80களின் இறுதியில் வெளியான அவரது சிரிப்போ சிரிப்பு நகைச்சுவை ஒலிநாடா மிகப் புகழ் பெற்றது.

விவேக், வடிவேலு உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் மயில்சாமி நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவை.

சிவ பக்தரான மயில்சாமி, சிவராத்திரியை முன்னிட்டு, அதிகாலை கேளம்பாக்கம் சிவன் கோயிலுக்குச் சென்றபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மயில்சாமியின் உடல் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மயில்சாமியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.