இஸ்லாமாபாத்: கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தேசிய அவையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இம்ரான் கானுக்குப் பதிலாக எதிர்கட்சியைச் சேர்ந்த ஷாபாஸ் ஷெரீப் இப்போது நாட்டின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார்.

ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் பிரதமர் பதவிக்காக எதிர்கட்சிகள் முன்மொழிந்த கூட்டு வேட்பாளர் ஆவார். இன்று ஏப்ரல் 11 ஆம் தேதி (திங்கள்கிழமை) பிற்பகலில் பாகிஸ்தான் தேசிய அவையான அதன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டபடி அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார்.

வாக்கெடுப்பில் ஷாபாஸ் ஷெரீஃபுக்கு 174 வாக்குகள் கிடைத்தன. இம்ரான் கானின் பிடிஐ கட்சி முன்மொழிந்த பிரதமர் வேட்பாளரான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.

முன்னதாக, திங்கள்கிழமை காலையில் நாடாளுமன்ற அமர்வு தொடங்கியவுடன், இம்ரான் கானின் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான், “அமெரிக்க உத்தரவின் பேரில் நாட்டில் நடக்கும் ‘சதி’யால் நான் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளேன்,” என்று கூறி வருகிறார்.

ஹவாலா பரிவர்த்தனை தொடர்பான வழக்கு ஷாபாஸ் ஷெரீப் மீது நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அந்த வழக்கில் ஷாபாஸ் ஷெரீஃபை ஏப்ரல் 27ஆம் தேதிவரை கைது செய்ய ஏற்கெனவே நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

யார் இந்த ஷாபாஸ்?

ஷாபாஸ் ஷெரீஃப் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஆவார். இவர் பாகிஸ்தானின் புகழ்பெற்ற வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். ஷாபாஸ் ஷெரீஃப் காஷ்மீரி வம்சாவளியைச் சேர்ந்த பஞ்சாபி. இவர் ஜம்மு காஷ்மீரின் மியான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.

1997-ம் ஆண்டு முதல் முறையாக அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல் அமைச்சரானார். பின்னர் நடந்த தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றிப் பெற்று 5 முறை அந்த மாகாண முதல் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் நாடு கடத்தப்பட்டபோது அவருடன் சேர்த்து ஷாபாஸ் ஷெரீஃபும் கடத்தப்பட்டார். 2007-ல் மீண்டும் அவர் நாடு திரும்பினார். மீண்டும் பஞ்சாப் முதல்வரானார். இப்போது பாகிஸ்தான் பிரதமராகியிருக்கிறார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *